குழந்தைக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்ற தந்தை கைது


குழந்தைக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்ற தந்தை கைது
x

மூலைக்கரைப்பட்டி அருகே குடும்ப தகராறில் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்

திருநெல்வேலி

இட்டமொழி:

மூலைக்கரைப்பட்டி அருகே குடும்ப தகராறில் குழந்தைக்கு விஷம் கொடுத்து கொல்ல முயன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.

கொத்தனார்

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே கீழ கோடன்குளம் கீழ தெருவைச் சேர்ந்தவர் செல்லம். இவருடைய மகன் தர்மராஜ் (வயது 30). கொத்தனார். இவருக்கும், பரப்பாடி அருகே பாண்டிச்சேரியைச் சேர்ந்த அபிஷாவுக்கும் (23) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு எட்வின் (3), செல்லம் (வயது 1½) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.

தர்மராஜ் தனக்கு சொத்துகளை பிரித்து தருமாறு கூறி, பெற்றோர் மற்றும் சகோதரர்களிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். மேலும் தர்மராஜ் தனது பெற்றோர், சகோதரர்களின் குடும்பத்தினரிடம் பேசக்கூடாது என்று கூறி மனைவியிடமும் தகராறு செய்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது.

குழந்தைக்கு விஷம் கொடுத்து...

சம்பவத்தன்று கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. பின்னர் மனைவி அபிஷா வீட்டை விட்டு வெளியே சென்றார். அப்போது தர்மராஜ் எலி மருந்தை (விஷம்) தின்று தற்கொலைக்கு முயன்றார். மேலும் வீட்டில் இருந்த தனது 1½ வயது குழந்தை செல்லத்துக்கும் எலி மருந்தை கொடுத்தார்.

சிறிதுநேரத்தில் அபிஷா வீட்டுக்கு திரும்பி வந்தபோது, கணவரும், குழந்தையும் உயிருக்கு போராடியவாறு கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அவர்கள் 2 பேருக்கும் முனைஞ்சிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்கு பின்னர் தர்மராஜ் குணமடைந்தார். குழந்தை செல்லத்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தர்மராஜை கைது செய்தனர்.


Next Story