மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை கைது
கோவையில் வீட்டில் தனியாக இருந்தபோது குடிபோைதயில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை
கோவையில் வீட்டில் தனியாக இருந்தபோது குடிபோைதயில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கல்லூரி மாணவி
கோவையை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவருடைய தந்தை லேத் பட்டறையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு குடிப்பழக்கத்துக்கு அடிமையான அவர், கஞ்சா பயன்படுத்தும் பழக்கத்துக்கும் அடிமையானதாக கூறப்படுகிது.
இதன் காரணமாக அவர் தினமும் வேலை முடிந்து வீட்டுக்கு வரும்போது குடித்துவிட்டு வந்து மனைவி மற்றும் குழந்தைகளிடம் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 1-ந் தேதி கல்லூரி படித்து வரும் 19 வயதான மாணவி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.
பாலியல் தொந்தரவு
அப்போது குடிபோதையில் வீட்டுக்கு வந்த அந்த மாணவியின் தந்தை, தனது மகள் என்றும் பாராமல் அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, தாய் வந்ததும் தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி கூறி அழுது உள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த மாணவியின் தாய், தனது கணவரிடம் கேட்டார். அப்போது கோபம் அடைந்த லேத் தொழிலாளி, தனது மனைவியை சரமாரியாக திட்டி, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததுடன், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து குத்த முயன்றார்.
தந்தை மீது வழக்கு
இந்த சம்பவம் குறித்து அந்த கல்லூரி மாணவி, கோவை மாநகர போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அந்த மாணவியின் தந்தை மீது கொலை மிரட்டல், பாலியல் தொந்தரவு செய்தல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.