கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய தந்தை கைது
கல்லூரி மாணவியிடம் அத்துமீறிய தந்தையை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியை ேசர்ந்த மாணவி ஒருவர், கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். படிப்பு செலவுக்காகவும், குடும்ப பண தேவைக்காகவும் அதே பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பகுதி நேரமாக மாணவி வேலைபார்த்து வருகிறார். இவருடைய தாயார் பட்டாசு ஆலையில் வேலைபார்த்து வருகிறார். இந்த நிலையில் அந்த மாணவி, பட்டாசு ஆலையில் பணியில் இருந்த தனது தாய்க்கு போன் செய்துள்ளார். வீட்டில் தனியாக இருந்தபோது, தந்தை தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக கூறி அழுதுள்ளார். இதனால் வீட்டுக்கு வந்த தாய், நடந்தது பற்றி மகளிடம் கேட்டுள்ளார்.
அதுபற்றி தனது கணவரிடம் கேட்டபோது மனைவியையும், மகளையும் அந்த நபர் மிரட்டியதாகவும், இருவரையும் எரித்து கொன்றுவிடுவதாகவும் கூறியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திருத்தங்கல் போலீசில், தாய் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாணவியின் தந்தையை கைது செய்தனர்.