குற்றாலத்தில் தந்தை-மகள் தற்கொலை..! தாய் ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராட்டம்


குற்றாலத்தில் தந்தை-மகள் தற்கொலை..! தாய் ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராட்டம்
x

குற்றாலத்தில் மூன்று பேர் விஷம் குடித்ததில் தந்தை மகள் பரிதாபமாக இறந்தனர். தாய் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தென்காசி:

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் குளித்து மகிழ தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். அந்த வகையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி கணவன், மனைவி, மகள் என மூன்று பேர் குற்றாலத்திற்கு வந்தனர். அவர்கள் குற்றாலம் அண்ணா சிலைக்கு அருகில் உள்ள ஒரு தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கினார்கள்.

கடந்த நான்கு நாட்களாக அவர்கள் குற்றாலத்தில் உள்ள அருவிகளில் குளித்தனர். பின்னர் நேற்று இரவு 10 மணி வரை அவர்களை விடுதியின் ஊழியர்கள் பார்த்துள்ளனர். இன்று காலை அறையை சுத்தம் செய்ய ஒரு ஊழியர் சென்ற போது அந்த அறையின் கதவு பூட்டப்படாமல் இருந்தது. வெகு நேரமாகியும் அவர்கள் வெளியே வராததால் உள்ளே சென்று பார்த்தபோது மூன்று பேரும் வாயில் நுரை தள்ளியபடி அங்கு படுத்து கிடந்தனர்.

உடனடியாக குற்றாலம் போலீசாருக்கு இது குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸ் இன்ஸ்பெக்டர் தாமஸ் தலைமையில் போலீசார் அங்கு சென்று பார்த்த போது ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து விசாரித்த போது விடுதியின் வரவேற்பு அறையில் அவர்கள் மகாலிங்கம் திருநகர் மதுரை என்ற முகவரியை கொடுத்துள்ளதும் இறந்தவர்கள் மகாலிங்கம் மற்றும் அவரது மகள் தன பிரியா என்பதும் தெரிய வந்தது. மேலும் அங்கு விஷம் குடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சுமார் 45 வயதுடைய காமாட்சி என்பதும் தெரியவந்தது.

போலீசார் காமாட்சியை மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? எதற்காக விஷம் குடித்தார்கள்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் காமாட்சி இயல்பு நிலைக்கு திரும்பினால் இதன் உண்மை நிலை தெரிய வரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே விடுதியில் மகாலிங்கம் கொடுத்த முகவரியில் மதுரையில் போலீசார் விசாரித்த போது அங்கு இவர்கள் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இவர்களைக் குறித்த தகவல் கிடைத்தவர்கள் குற்றாலம் காவல் நிலைய 04633 283137 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என போலீசார் அறிவித்துள்ளனர்.


Related Tags :
Next Story