வாலிபரை கொன்ற மாமனார் கைது
பரவையில் வாலிபரை கொன்ற மாமனார் கைது செய்யப்பட்டார்.
பரவையில் வாலிபரை கொன்ற மாமனார் கைது செய்யப்பட்டார்.
தொழிலாளி
தேனி மாவட்டம் பெரியகுளம் பட்டத்து அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நாகபாண்டி (வயது 27). தொழிலாளி. இவருக்கும் பரவையை சேர்ந்த முத்துக்குமார் மகள் சந்தியாவுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. அதன்பின் நாகபாண்டி மாமனார் வீட்டில் மனைவி சந்தியாவுடன் வசித்து வந்தார்.இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில் சந்தியாவுக்கும் நாகபாண்டிக்கும் அடிக்கடி குடும்ப சண்டை நடந்து வந்தது. கடந்த 3-ந்தேதி இரவு 9.15 மணியளவில் நாக பாண்டி கோவை துடியலூரில் உள்ள அக்காள் தேவியின் கணவர் சாமுவேலுக்கு போன் செய்து தனது மனைவியின் குடும்பத்தினர் தன்னை அடித்து காயப்படுத்தி விட்டார்கள். அதனால் உடனே வந்து தன்னைகூட்டி செல்லும்படி கூறியுள்ளார்.
மாமனார் கைது
அதன் பின் 4-ந் தேதி காலை 9 மணிக்கு நாகபாண்டி இறந்து விட்டதாக அக்காள் தேவிக்கு தகவல் கிடைக்க உடனே புறப்பட்டு வந்தார். அவர் மதுரை அரசு மருத்துவமனையில் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த தம்பி நாகபாண்டி உடலை பார்த்தபோது தலையில் காயமும் உடம்பில் காயமும் இருந்ததாக தெரியவந்தது. அதனால் தனது தம்பியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி தேவி கொடுத்த புகாரின் பேரில் சமயநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தி, சப்-இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சம்பவத்தன்று மருமகன் நாகபாண்டியை மாமனார் முத்துக்குமார் அடித்து தாக்கியதால் அவர் இறந்தது தெரிய வந்தது. அதனால் மாமனார் முத்துக்குமாரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.