இளம்பெண் தற்கொலை வழக்கில் மாமனார், மாமியார் கைது


இளம்பெண் தற்கொலை வழக்கில் மாமனார், மாமியார் கைது
x

ஜோலார்பேட்டை அருகே நடந்த இளம்பெண் தற்கொலை வழக்கில் மாமனார், மாமியார் கைது செய்யப்பட்டனர்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த பெரிய மண்டலவடி பகுதியை சேர்ந்தவர் பழனி, இவரது மகள் சரிகா (வயது 18). அதே பகுதியை சேர்ந்த ராஜா மகன் பிரபாகரன் (28). ராணுவ வீரர். இவர்கள் இருவரும் கடந்த 2019-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதனால் சரிகாவின் தந்தை பழனி தனது மகளை கடத்திச் சென்றதாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து ராணுவ வீரரான பிரபாகரன் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமினில் வெளிவந்த பிரபாகரன் சரிகாவின் வீட்டிற்கு சென்று சரிகாவை தனது வீட்டிற்கு அழைத்து வந்து வாழ்ந்து வந்துள்ளார்.

அப்போதுதான் பிரபாகரனுக்கு ஏற்கனவே திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த பூர்ணிமா என்பவருடன் திருமணமாகி ஒரு குழந்தை இருப்பது தெரியவந்தது. இதனால் சரிகா கணவரைப் பிரிந்து இரண்டு மாதங்களாக தாய் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த 29-ந் தேதி பிரபாகரன் தனது பிறந்த நாளை முதல் மனைவி பூர்ணிமாவுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இதனால் விரக்தி அடைந்த சரிகா நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தில் திருமணமான சிறிது நாட்களிலேயே பிரபாகரன் இவரது தந்தை ராஜா (62), தாய் நவநீதம் (54) ஆகியோர் செய்த கொடுமைகள் குறித்து எழுதி வைத்துள்ளார்.

இதுகுறித்து பழனி ஜோலார்பேட்டை போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி, சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கு காரணமாக இருந்த பிரபாகரனின் தந்தை ராஜா, தாய் நவநீதம் ஆகியோரை நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பிரபாகரனை தேடி வருகின்றனர்.


Next Story