மருமகனை கத்தியால் குத்தி கொன்ற மாமனாருக்கு ஆயுள் தண்டனை
குடும்ப தகராறு காரணமாக மருமகனை கத்தியால் குத்தி கொன்ற மாமனாருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
குடும்ப தகராறு காரணமாக மருமகனை கத்தியால் குத்தி கொன்ற மாமனாருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை கோர்ட்டு தீர்ப்பளித்தது.
குடும்ப தகராறு
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நல்லம்பள்ளி மதுரை வீரன் கோவில் வீதி பகுதியை சேர்ந்தவர் ராணி. இவருடைய மகள் மலர்க்கொடி. இவருக்கு துரையன் என்பவருடன் திருமணம் நடந்தது. அவர்களுக்கு குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் மலர்க்கொடியின் தந்தை உயிரிழந்துவிட்டதால், அவருடைய தாயார் ராணி, 2-வதாக தண்டபாணி (62) என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
ஆரம்பத்தில் மகிழ்ச்சியாக 2 பேரும் குடும்பம் நடத்தினார்கள். பின்னர் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
இதனால் அவர்கள் 2 பேரும் தனியாக மாப்பிள்ளைகவுண்டன்புதூரில் வீடு எடுத்து வசித்து வந்தனர். அங்கும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
கத்தியால் குத்தி கொலை
இதை தொடர்ந்து ராணி பிரிந்து சென்று அந்தப்பகுதியில் தனியாக வசித்து வந்தார். இதனால் அவரை மகள் மலர்க்கொடி, மருமகன் துரையன் மற்றும் பேரக்குழந்தைகள் அவ்வப்போது சென்று பார்த்துவிட்டு வந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17-ந் தேதி மலர்க்கொடி தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் தாயார் வீட்டுக்கு சென்றார்.
அப்போது அங்கு வந்த தண்டபாணி, தனது மனைவி ராணியுடன் தகராறில் ஈடுபட்டார். உடனே வீட்டில் இருந்த துரையன் மற்றும் மலர்க்கொடி ஆகியோர் சென்று 2 பேரையும் சமரசம் செய்து வைக்க முயற்சி செய்தனர்.
அப்போது ஆத்திரம் அடைந்த தண்டபாணி, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து தனது மருமகனான துரையனை குத்தினார். தடுக்க வந்த மலர்க்கொடியையும் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றார்.
இதில் பலத்த காயம் அடைந்த துரையன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வடக்கிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தண்டபாணியை கைது செய்தனர்.
ஆயுள் தண்டனை
பின்னர் இது தொடர்பான வழக்கு கோவையில் உள்ள வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்ததை தொடர்ந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி குற்றம் சாட்டப்பட்ட தண்டபாணிக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி டி.பாலு தீர்ப்பளித்தார்.
இதையடுத்து அவரை போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச்சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.