மருமகனால் வெட்டப்பட்ட மாமனார் சாவு; கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை
விக்கிரமசிங்கபுரம் அருகே மருமகனால் வெட்டப்பட்ட மாமனார் நேற்று இறந்தார். இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரமசிங்கபுரம்:
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள முதலியார்பட்டி நடுத்தெருவைச் சேர்ந்தவர் முத்துக்குட்டி (வயது 56), பனை தொழிலாளி. இவர் தனது மகளை அதே பகுதியில் பனை தொழில் செய்து வரும் தனது உறவுக்காரரான தர்மர் மகன் ஆதிலட்சுமணன் (38) என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்தார். இந்த தம்பதியின் மகன் தருண் (7). கடந்த 8-ந் தேதி மகள் வீட்டிற்கு சென்ற முத்துக்குட்டி அங்கிருந்த பேரன் தருணை, மருமகனிடம் தெரிவிக்காமல் கோவிலுக்கு அழைத்துச் சென்றார்.
இதனால் ஏற்பட்ட தகராறில் ஆதிலட்சுமணன் கத்தியால் முத்துக்குட்டியை வெட்டியதாகவும், பதிலுக்கு முத்துக்குட்டி அரிவாளால் ஆதிலட்சுமணனை வெட்டியதாகவும் கூறப்படுகிறது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து உறவினர்கள் அவர்களை மீட்டு, முத்துக்குட்டியை நெல்லை அரசு ஆஸ்பத்திரியிலும், ஆதிலட்சுமணனை அம்பை அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சைக்காக சேர்த்தனர். தகவல் அறிந்ததும் விக்கிரமசிங்கபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த், அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
இந்தநிலையில் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த முத்துக்குட்டி சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார். இதையடுத்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஆதிலட்சுமணனை சிகிச்சை முடிந்ததும் கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.