திருப்பத்தூரில் மாமன்னர்கள் மருதுபாண்டியர் குருபூஜை: அமைச்சர்கள்-தலைவர்கள் மரியாதை


திருப்பத்தூரில் மாமன்னர்கள் மருதுபாண்டியர் குருபூஜை: அமைச்சர்கள்-தலைவர்கள் மரியாதை
x

மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் குருபூஜையையொட்டி திருப்பத்தூர் நினைவு மண்டபத்தில் மருதுபாண்டியர்களின் உருவச்சிலைகளுக்கு அமைச்சர்கள், தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

திருப்பத்தூர்,

மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் 222-ம் ஆண்டு நினைவு தினம், குருபூஜை நேற்று நடந்தது. இதையொட்டி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ன நினைவு மண்டபத்தில் மருதுபாண்டியர் சிலைகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

மருதுபாண்டியர்களின் வாரிசுதாரர்கள் குழுத்தலைவர் ராமசாமி தலைமையில் பொங்கல் வைத்து பூஜைகள் நடந்தன.

தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஆஷா அஜீத் தேசிய கொடியேற்றி, மருதுபாண்டியர்களின் உருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அமைச்சர்கள்

பின்னர் தி.மு.க. சார்பில், அமைச்சர்கள் தங்கம்தென்னரசு, கே.ஆர்.பெரியகருப்பன், ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன், பி.மூர்த்தி ஆகியோர் நினைவு மண்டபத்தில் உள்ள மருதுபாண்டியர் உருவச்சிலைகளுக்கும், பஸ் நிலையம் எதிரே உள்ள நினைவு ஸ்தூபிக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மாவட்டம் முழுவதும் இருந்து மாவட்ட, ஒன்றிய, நகர், பேரூர் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட ஏராளமான தி.மு.க.வினர் மரியாதை செலுத்தினர்.

அ.தி.மு.க.

அ.தி.மு.க. சார்பில், முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், கோகுலஇந்திரா, விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன், பாஸ்கரன், மணிகண்டன், மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான பி.ஆர்.செந்தில்நாதன் மரியாதை செலுத்தினர்.

ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் மாநில செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ், மாவட்ட செயலாளர் அசோகன், தர்மர் எம்.பி. உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

டி.டி.வி.தினகரன்-துரை வைகோ

அ.ம.மு.க. சார்பில் பொதுச்செயலாளர் டி.டிவி.தினகரன் தலைமையில் அக்கட்சி நிர்வாகிகள் மருதுபாண்டியர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ம.தி.மு.க., சார்பில் முதன்மை செயலாளர் துரை வைகோ உள்பட பலர் மரியாதை செலுத்தினர்.

காங்கிரஸ்-பா.ஜனதா

காங்கிரஸ் சார்பில், காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி, மாவட்ட தலைவர் சஞ்சைக்காந்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

இதேபோல் பா.ஜ.க., விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர், கம்யூனிஸ்டு உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள், சமுதாய அமைப்பினர், பொதுமக்கள் மருதுபாண்டியர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


Next Story