கன்டெய்னர் லாரி சக்கரம் ஏறி தந்தை-மகன் பலி
பவானி அருகே மோட்டார்சைக்கிளில் முந்திச்செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் லாரி சக்கரம் ஏறி ஜாதகம் பார்த்துவிட்டு சென்ற தந்தை, மகன் பலியானார்கள்.
பவானி அருகே மோட்டார்சைக்கிளில் முந்திச்செல்ல முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் லாரி சக்கரம் ஏறி ஜாதகம் பார்த்துவிட்டு சென்ற தந்தை, மகன் பலியானார்கள்.
ஜாதகம் பார்க்க...
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சீதாராம்பாளையம் சக்திவேல் நகர் பகுதியை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம் (வயது 67). இவருடைய மகன் தனசேகர் (34). 2 பேரும் தச்சு தொழிலாளர்கள். தனசேகரனுக்கு திருமணம் ஆகவில்லை. எனவே திருமணம் சம்பந்தமாக ஜோதிடரை பார்ப்பதற்காக ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள சித்தோட்டுக்கு மோட்டார்சைக்கிளில் சென்றனர்.
பின்னா் அங்கு ஜாதகம் பார்த்துவிட்டு மீண்டும் திருச்செங்கோட்டுக்கு மோட்டார்சைக்கிளில் திரும்பி சென்றனர். மோட்டார்சைக்கிளை தனசேகர் ஓட்டினார். பின்னால் ஞானப்பிரகாசம் உட்கார்ந்திருந்தார். பவானியை அடுத்த லட்சுமி நகர் காவிரி ஆற்று பாலம் அருகே சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரியை தனசேகர் முந்தி செல்ல முயன்றார்.
உடல் நசுங்கி பலி
அப்போது கன்டெய்னர் லாரியும், மோட்டார்சைக்கிளும் எதிர்பாராதவிதமாக உரசிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதில் மோட்டார்சைக்கிளில் இருந்து கீழே விழுந்த தனசேகர், ஞானப்பிரகாசத்தின் மீது லாரியின் சக்கரங்கள் ஏறி இறங்கின. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே தனசேகர், ஞானப்பிரகாசம் உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.
இதுபற்றி அறிந்ததும் சித்தோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகையா, போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தனசேகர், ஞானப்பிரகாசம் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
டிரைவர் கைது
இந்த விபத்து காரணமாக கோவை- தேசிய நெடுஞ்சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைத்ெதாடர்ந்து கோவை- தேசிய ெநடுஞ்சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் பவானி புதிய பஸ் நிலையம் வழியே குமாரபாளையம் சென்று அங்கிருந்து மீண்டும் சேலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் திருப்பி விடப்பட்டன.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கன்டெய்னர் லாரியின் டிரைவரான கேரள மாநிலம் பாலக்காடு மகாலிங்கபுரத்தை சேர்ந்த ஹக்கீம் (47) என்பவரை கைது செய்தனர்.