புதையல் இருப்பதாக விவசாயியிடம் ரூ.30 லட்சம் மோசடி:தந்தை- மகனுக்கு 2 ஆண்டு ஜெயில்
புதையல் இருப்பதாக விவசாயியிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்த வழக்கில் தந்தை- மகனுக்கு தலா 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.
சேலம்
புதையல் இருப்பதாக விவசாயியிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்த வழக்கில் தந்தை- மகனுக்கு தலா 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டுள்ளது.
புதையல் மோசடி
சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் நொச்சிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 52). விவசாயியான இவர், கடந்த 2016-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ந் தேதி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் மனுவை அளித்தார். அதில் மேட்டூரை அடுத்த கருப்பு ரெட்டியூரை சேர்ந்த ஆறுமுகம், அவருடைய மகன் அசோக்குமார் ஆகியோர் எனக்கு அறிமுகம் ஆனார்கள்.
ஆறுமுகம் நாட்டு வைத்தியவர் என்பதால் உடல்நிலை பாதிப்புக்கு அவரிடம் மருத்துவ ஆலோசனை கேட்டு வந்தேன். ஒருநாள் எனது வீட்டிற்கு வந்த அவர், வெற்றிலையில் மை போட்டு பார்த்து வீட்டில் புதையல் இருப்பதாகவும், அதனை எடுக்க வேண்டும் என்றால் ரூ.30 லட்சம் தர வேண்டும் எனவும் கூறினார். இதனை நம்பி அவர்களிடம் ரூ.30 லட்சத்தை கொடுத்தேன்.
2 ஆண்டுகள் சிறை
ஆனால் புதையல் இருப்பதாக கூறி என்னை ஏமாற்றி மோசடி செய்துவிட்டனர். இதனால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, வீட்டில் புதையல் இருப்பதாக ராஜேந்திரனிடம் ஆசை வார்த்தை கூறி இருவரும் ரூ.30 லட்சத்தை வாங்கிக்கொண்டு மோசடி செய்தது தெரியவந்தது. இந்த வழக்கு சேலம் 6-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் இறுதி விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதில், புதையல் இருப்பதாக கூறி மோசடி செய்த ஆறுமுகம், அசோக்குமார் ஆகிய இருவருக்கும் தலா 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட்டு கமலகண்ணன் தீர்ப்பு கூறினார்.