தந்தையின் ஜாமீன் மனு தள்ளுபடி - கடத்தல் வழக்கில் போலீசாரின் விசாரணைக்கு குருத்திகா ஆஜராகாதது ஏன்? -மதுரை ஐகோர்ட்டு கேள்வி
கடத்தல் வழக்கில் போலீசாரின் விசாரணைக்கு குருத்திகா ஆஜராகாதது ஏன் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி எழுப்பினார்.
கடத்தல் வழக்கில் போலீசாரின் விசாரணைக்கு குருத்திகா ஆஜராகாதது ஏன் என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி கேள்வி எழுப்பினார்.
கடத்தல் வழக்கு
தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் வினீத் என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த குருத்திகா என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இந்த திருமணத்தை குருத்திகாவின் பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. தனது மகளை கடத்தி சென்றதாக போலீசில் புகார் செய்தனர்.
பின்னர் வினீத்-குருத்திகா இருவரும் மோட்டார் சைக்கிளில் சென்றபோது, அவர்களை மறித்தனர். வினீத்தை தாக்கிவிட்டு, குருத்திகாவை கடத்தி சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக குருத்திகாவின் தந்தை நவீன் படேல் மற்றும் அவரது உறவினர்கள் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் பலர் கைதானார்கள்.
பணபலம் மிக்கவர்கள்
தற்போது குருத்திகாவின் தந்தை நவீன்படேல் தனக்கு ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது குற்றவியல் கூடுதல் அரசு வக்கீல் மீனாட்சிசுந்தரம் ஆஜராகி, கடத்தல் வழக்கில் மனுதாரர் முக்கிய குற்றவாளி. அவருக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களை கலைக்க நேரிடும். மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு உள்ளவர்கள் அனைவரும் போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கின்றனர். கடத்தப்பட்டதாக கூறப்பட்ட இளம் பெண் குருத்திகாவை விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
ஆனாலும் இதுவரை அவர் ஆஜராகவில்லை. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிலர் குஜராத்தில் தலைமறைவாகி விட்டனர். இவர்கள் பணபலம் மிக்கவர்கள் என்பதால் இந்த வழக்கை நீர்த்துப்போக செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே மனுதாரருக்கு ஜாமீன் அளிக்கக்கூடாது என வாதாடினார்.
குருத்திகா ஆஜராகாதது ஏன்?
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, குருத்திகா ஏற்கனவே கோர்ட்டில் ஆஜராகி போலீசாரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக கூறியிருக்கிறார். அவ்வாறு இருக்கும்போது போலீசாரின் விசாரணைக்கு ஆஜராகாதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
இதை கருத்தில் கொண்டு மனுதாரருக்கு ஜாமீன் வழங்க முடியாது எனக்கூறி, இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.