பழுதான மின்மாற்றியை சீரமைக்க வேண்டும்
சதாகுப்பத்தில் பழுதான மின்மாற்றியை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாணாபுரம்
தண்டராம்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது சதாகுப்பம். இப்பகுதியில் இருந்து தென்பெண்ணை ஆறு செல்லும் சாலையில் மின்மாற்றி உள்ளது.
இந்த மின்மாற்றி மூலம் அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் மின்இணைப்பு பெற்று மின்மோட்டார் மூலம் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு மின்மாற்றி பழுதானது.
இதுகுறித்து பெருந்துறைப்பட்டு துணை மின் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கரும்பு பயிரிடப்பட்டு 6 மாதங்கள் ஆன நிலையில் மின்மாற்றி பழுதுதானதால் மின்மோட்டார் மூலம் தண்ணீர் பெற முடியவில்லை.
இதனால் கரும்பு, நெல், மணிலா, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் காய்ந்து வருகிறது. மேலும் பழுதான மின்மாற்றியை சீரமைக்காமல் வேறு ஒரு பகுதியில் உள்ள மின்மாற்றியில் இருந்து மின்சாரம் மாற்றி வழங்குகின்றனர்.
இதனால் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதான மின்மாற்றியை சீரமைக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்றனர்.