'பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது'


பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது
x

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

சிவகங்கை

சிவகங்கை,

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது என்று வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

விலை குறைப்பு

மத்திய அரசு பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.50-ம், டீசல் ரூ.7-ம் நேற்று முன்தினம் முதல் அதிரடியாக குறைத்தது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர். பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து வாகன ஓட்டிகள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

சிவகங்கையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சேகர் கூறும் போது:-

பெட்ரோல் விலை குறைந்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. கடந்த காலங்களில் தினசரி பெட்ரோல் விலை உயர்வு இருந்தது. ஒவ்வொரு நாளும் விலை உயர்ந்து கொண்டே போனது. இது ஆட்டோ தொழிலாளர்களின் வாழ்வில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

மகிழ்ச்சி அளிக்கிறது

தினசரி விலை உயர்வு இருந்தபோதிலும் எங்களால் வாடிக்கையாளரிடம் கூடுதல் வாடகை வசூலிக்க முடியாத நிலை இருந்தது. இதனால் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டுபவர்கள் வீட்டிற்கு தினசரி 500 ரூபாய் கொண்டு செல்வதே பெரிய விஷயமாக இருந்தது. அதே சமயத்தில் வாடகைக்கு ஆட்டோ எடுத்து ஓட்டும் ஓட்டுனர் நிலை மிகவும் பரிதாபகரமானது. ஒரு நாள் முழுவதும் ஆட்டோ ஓட்டி ரூ.200 கூட கொண்டு செல்ல முடியாத நிலை இருந்தது. இந்த நிலையில் அரசு பெட்ரோல் விலையை குறைத்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

தமிழக அரசும் குறைக்க வேண்டும்

சிங்கம்புணரி கால்டாக்சி டிரைவர் கே.ஆர்.வி.குமார் கூறும் போது:-

மத்திய அரசு டீசல், பெட்ரோல் விலையை குறைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.எங்களிடம் பயணிக்கும் வாடிக்கையாளர்கள் பயண தூரத்திற்கு அதிக தொகை கேட்பதாக வருத்தம் தெரிவித்து வரும் நிலையில் இதுபோன்ற பெட்ரோல், டீசல் விலை குறைப்பு கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது.

இதேபோல் தமிழக அரசும் தன் பங்கிற்கு பெட்ரோல், டீசல் வரிகளை குறைத்தால் இன்னும் விலை குறைய வாய்ப்புள்ளது. இதன் மூலம் விலைவாசியை கட்டுக்குள் கொண்டுவர முடியும். எனவே மத்திய அரசு எடுத்த முடிவை மாநில அரசும் எடுக்க வேண்டும் என்றார்.

சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும்

சிவகங்கையை சேர்ந்த கயல்விழி பாண்டியன்(குடும்ப தலைவி) கூறும் போது:-

மத்திய அரசு பாரத பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின்கீழ் ஏழைகளுக்கு விலையில்லாத அடுப்பு மற்றும் சிலிண்டரை வழங்குகிறது. இதன் பின்னர் மாதந்தோறும் அவர்கள் வாங்கும் சிலிண்டருக்கு பணம் செலுத்த வேண்டும். தற்போது சிலிண்டர் விலை ரூ.1100-ஐ தாண்டிவிட்டது. ஏற்கனவே விலை உயர்வால் நடுத்தர குடும்பத்தினர் பாதிக்கப்பட்ட நிலையில் ஏழை மக்கள் மிகவும் அவதிப்பட்டனர். இந்த நிலையில் மத்திய அரசு உஜ்வாலா திட்டத்தில் வழங்கும் சிலிண்டர்களுக்கு ரூ.200 வீதம் மானியம் வழங்கப்படும் என்றும் வருடத்திற்கு 12 சிலிண்டருக்கு இந்த மானியம் வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளது வரவேற்கத்தக்கது. இதேபோன்று மற்றவர்களுக்கும் மானியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மேலும் சிலிண்டர் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்தால் தான் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்றார்.


Related Tags :
Next Story