'பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்தது வரவேற்கத்தக்கது தான்'


பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்தது வரவேற்கத்தக்கது தான்
x

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்தது வரவேற்கத்தக்கது தான். இனிமேல் அதன் விலையை உயர்த்தக்கூடாது என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்தது வரவேற்கத்தக்கது தான். இனிமேல் அதன் விலையை உயர்த்தக்கூடாது என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல்,டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. சமீப காலமாக பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.100-ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து பொருட்களின் விலையும் அதிகரித்து விட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

ஏழை, எளிய மக்கள் பயன்படுத்தும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என அனைத்து கட்சியினரும், பொதுமக்களும் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதை தொடர்ந்து மத்திய அரசு நேற்று முன்தினம் பெட்ரோல் மீதான உற்பத்தி வரியை லிட்டருக்கு ரூ.8 மற்றும் டீசல் மீதான உற்பத்தி வரி லிட்டருக்கு ரூ.6 குறைத்தது. இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.50-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7-ம் குறைந்தது. விலை குறைப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். பெட்ரோல், டீசல் விலை குறைப்பு குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

வரவேற்கத்தக்கது

ராமேசுவரத்தை சேர்ந்த கார் டிரைவர் மணிகண்டன் கூறியதாவது:-

பெட்ரோல், டீசல் விலை இதுவரை இல்லாத அளவுக்கு மிக உச்சத்தில் உள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். தற்போது பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.50-ம், டீசல் லிட்டருக்கு ரூ.7-ம் குறைக்கப்பட்ட அறிவிப்பு என்பது உண்மையாகவே வரவேற்கக்கூடிய மகிழ்ச்சியான அறிவிப்புதான். கார் மற்றும் ஆட்டோ ஓட்டுபவர்கள் ஒரு நாளைக்கு 10 லிட்டர் டீசல் போடும் பட்சத்தில் ரூ.7 குறைக்கப்பட்டுள்ளதால் 70 ரூபாய் மிச்சமாகும்.அதேநேரத்தில் இன்னும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட வேண்டும் என்பதே ஒட்டுமொத்த வாகன ஓட்டுனர்களின் விருப்பமாகும். எனவே இனிமேல் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு அதிகரிக்க கூடாது.

விலையை அதிகரிக்கக்கூடாது

ராமேசுவரத்தை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சாமிநாதன்:-

இருசக்கர வாகனத்திற்கு ஒரு நாளைக்கு 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டால் மூன்று நாட்கள் வரையிலும் ஓட்டி வந்தோம். ஆனால் தற்போது உள்ள விலைவாசி உயர்வை பார்க்கும்போது 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டால் ஒரு நாளைக்கு கூட இருசக்கர வாகனத்தை முழுமையாக ஓட்ட முடியவில்லை. தற்போது உள்ள பெட்ரோல் விலையை பார்க்கும்போது இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போடுவதற்காகவாவது கண்டிப்பாக வேலைக்கு செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அந்த அளவுக்கு இதுவரை இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலை உயர்ந்து உள்ளது.தற்போது விலை குறைப்பு அறிவிப்பு உண்மையாகவே மகிழ்ச்சியானது தான். அதே நேரத்தில் இன்னும் விலையை குறைக்கப்பட வேண்டும்.மீண்டும் பெட்ரோல் விலையை உயர்த்தாமல் இருக்கவேண்டும்.

ஜி.எஸ்.டி.க்குள் கொண்டு வர வேண்டும்

பரமக்குடியை சேர்ந்த டிரைவர் நாகராஜன்:-

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு சற்று மகிழ்ச்சியையும் ஆறுதலையும் அளிக்கிறது. இருந்தாலும் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொன்னபடி பெட்ரோல், டீசல் விலையை குறைத்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும். வாகன ஓட்டிகள் எங்கு சென்றாலும் பெட்ரோல், டீசல் விலை அச்சத்தால் செல்ல வேண்டிய நிலை உள்ளது. சரக்குகளையும் பொதுமக்களையும் ஏற்றிச் செல்லும் போது அவர்களிடம் பெட்ரோல், டீசல் உயர்வை கருத்தில் கொண்டு வாடகையும் அதிகளவில் வாங்க வேண்டிய நிலை உள்ளது. பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்பிற்குள் கொண்டு வந்தால் இன்னும் விலை குறைய வாய்ப்பு உள்ளதாக கூறுகின்றனர்.அதை செய்தால் இன்னும் மகிழ்ச்சியாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Related Tags :
Next Story