ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து 2 மாணவிகள் படுகாயம்


ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து 2 மாணவிகள் படுகாயம்
x

கூட்டம் அதிகமாக இருந்ததால் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த 2 மாணவிகள், ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தனர்.

திண்டுக்கல்

அரசு பஸ்

திண்டுக்கல் மாவட்டம் கோவிலூர் அருகே உள்ள புதுரோடு கிராமத்தில் இருந்து வேடசந்தூருக்கு தினமும் காலையில் அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. நாகையகோட்டை, வெல்லம்பட்டி, அம்மாபட்டி, அம்மாபட்டிபுதூர், தேவநாயக்கன்பட்டி,நத்தப்பட்டி, குஞ்சுவீரன்பட்டி, காலனம்பட்டி ஆகிய கிராமங்களின் வழியாக இந்த பஸ் வேடசந்தூருக்கு செல்கிறது.

காலை நேரத்தில் அந்த வழித்தடத்தில் இயக்கப்படுகிற ஒரே பஸ் என்பதால் எப்போதும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் ஊழியர்கள் பலர் இந்த பஸ்சில் பயணம் செய்து வருகின்றனர்.

2 மாணவிகள் படுகாயம்

வழக்கம்போல நேற்று அந்த பஸ் புதுரோட்டில் இருந்து வேடசந்தூர் நோக்கி புறப்பட்டது. காலை 8.45 மணி அளவில், அம்மாபட்டிபுதூர் பஸ் நிறுத்தத்துக்கு பஸ் வந்தது. அந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து, அம்மாபட்டிபுதூரை சேர்ந்த கல்லூரி மாணவி சவுடீஸ்வரி, 9-ம் வகுப்பு மாணவி ரேணுகா மற்றும் சிலர் ஏறினர்.

பஸ்சில் கூட்டம் அலைமோதியது. இருக்கையில் இடமில்லாமல் பலர் நின்று கொண்டிருந்தனர். பஸ்சுக்குள் செல்ல இடமில்லாததால், மாணவிகள் உள்பட சிலர் படிக்கட்டிலேயே தொங்கியபடி பயணம் செய்தனர்.

அடுத்த நிறுத்தமான தேவநாயக்கன்பட்டி அருகே பஸ் வந்து கொண்டிருந்தது. அங்குள்ள வளைவில் பஸ் திரும்பி, வேகத்தடையில் ஏறி இறங்கியது. இதில் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த மாணவிகள் சவுடீஸ்வரி, ரேணுகா மற்றும் சிலர் நிலைதடுமாறி பஸ்சில் இருந்து கீழே விழுந்தனர். இதில் மாணவிகள் 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.மற்றவர்கள் காயம் இன்றி தப்பினர்.

கூடுதல் பஸ் இயக்க கோரிக்கை

இதற்கிடையே காயம் அடைந்த மாணவிகளை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் மேல் சிகிச்சைக்காக மாணவி ரேணுகா, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விபத்து குறித்து தகவல் அறிந்த மாணவிகளின் உறவினர்கள் வேடசந்தூர் அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு திரண்டு சென்றனர். பின்னர் அவர்கள், அங்கிருந்த ஊழியர்களிடம் மாணவ-மாணவிகளின் நலன் கருதி புதுரோடு-வேடசந்தூர் வழித்தடத்தில் காலை, மாலை நேரத்தில் கூடுதல் பஸ் இயக்க வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள், தானாகவே அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதற்கிடையே காயம் அடைந்து சிகிச்சை பெறும் மாணவிகளை மருத்துவமனைக்கு சென்று, காந்திராஜன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆறுதல் கூறினார். இதேபோல் வேடசந்தூர் அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் டிரைவர், கண்டக்டர்கள் சிலர் மருத்துவமனைக்கு வந்து மாணவிகளை சந்தித்து ஆறுதல் கூறினர்.

ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து 2 மாணவிகள் படுகாயம் அடைந்த சம்பவம் வேடசந்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story