பெண் கழுத்தறுத்து படுகொலை


பெண் கழுத்தறுத்து படுகொலை
x

சேலத்தில் மகளின் காதல் திருமணத்துக்கு உதவியதால் பெண்ணின் கழுத்தை அறுத்து கொழுந்தன் படுகொலை செய்தார்.

சேலம்

அன்னதானப்பட்டி:-

சேலத்தில் மகளின் காதல் திருமணத்துக்கு உதவியதால் பெண்ணின் கழுத்தை அறுத்து கொழுந்தன் படுகொலை செய்தார்.

பிரிந்து வாழ்ந்தனர்

சேலம் கன்னங்குறிச்சி அருகே உள்ள பெரிய கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மனைவி சாந்தி (வயது 40). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். குடும்ப பிரச்சினை காரணமாக கண்ணன், சாந்தி ஆகிய இருவரும் கடந்த 10 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

சாந்தி தனது மகளுடன் அன்னதானப்பட்டி மாரியம்மன் கோவில் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். மேலும் அவர் பழைய பஸ்நிலையம் பகுதியில் உள்ள ஒரு எலக்ட்ரிக்கல் கடையில் வேலைக்கு சென்று வந்தார்.

அவர் பா.ஜனதா கட்சியில் மகளிரணி மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார். அஸ்தம்பட்டி பகுதியில் கண்ணனின் தம்பி கருணாநிதி (45) குடும்பத்துடன் வசித்து வருகிறார். கண்ணனும், கருணாநிதியும் ஒன்றாக சேர்ந்து கோரிமேட்டில் சலூன் கடை நடத்தி வருகின்றனர்.

காதல் திருமணம்

இந்த நிலையில் கருணாநிதியின் மகள் ராஜேஸ்வரி தான் காதலித்து வந்த அதே பகுதியை சேர்ந்த மோகன்லால் என்ற வாலிபரை கடந்த 13-ந் தேதி வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மகளின் காதல் திருமணத்துக்கு அண்ணி சாந்தி உதவியதாக கருணாநிதியிடம் சிலர் கூறி உள்ளனர். இதனால் அவர் இதுதொடர்பாக அண்ணியிடம் அடிக்கடி வாக்குவாதம் செய்துள்ளார்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் கருணாநிதி அன்னதானப்பட்டியில் உள்ள தனது அண்ணி வீட்டுக்கு வந்தார். அந்த நேரத்தில் சாந்தியின் மகள் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கருணாநிதி அவரிடம் தனது மகள் காதல் திருமணத்துக்கு நீங்கள் ஏன் உடந்தையாக இருந்தீர்கள்? என கூறி தகராறில் ஈடுபட்டார்.

கழுத்தை அறுத்து கொலை

அப்போது ஆத்திரமடைந்த கருணாநிதி தான் மறைத்து கொண்டு வந்த கத்தியை எடுத்து சாந்தியின் கழுத்தை அறுத்தார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் கீழே சரிந்து விழுந்தார். பின்னர் அங்கிருந்து கருணாநிதி தப்பி ஓடிவிட்டார். படுகாயம் அடைந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த சாந்தியை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். இதில் சாந்தி வரும் வழியிலேயே இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அன்னதானப்பட்டி போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்றனர். பின்னர் சாந்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்தனர்.

வலைவீச்சு

மேலும் போலீஸ் உதவி கமிஷனர் ராமமூர்த்தி, இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் கொலை நடந்த இடத்திற்கு விரைந்து சென்று அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த கொலையில் தொடர்புடைய சாந்தியின் கொழுந்தனரான கருணாநிதியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெண் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அன்னதானப்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story