ஏரியில் பெண் உடல் மீட்புகொலையா? என போலீஸ் விசாரணை

சேலம்
ஏரியில் இறந்து கிடந்த பெண் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெண் உடல் மீட்பு
சேலம் கிச்சிப்பாளையம் அருகே உள்ள எருமாபாளையம் பகுதியில் குருவிபனை ஏரி உள்ளது. இந்த ஏரியில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது. இந்த ஏரியில் சுமார் 41 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் நேற்று மிதந்தது. இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் கிச்சிப்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் போலீசார் மற்றும் செவ்வாய்பேட்டை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் ஏரியில் மிதந்த பெண்ணின் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். தொடர்ந்து போலீசார் பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் விசாரணை
இதையடுத்து இறந்த பெண் யார்?, எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அந்த பெண் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த அலாவுதீன் மனைவி பர்கத் நிஷா (வயது 41) என்பதும், அவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டதும் தெரியவந்தது.
மேலும் அவர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா?, அல்லது கொலை செய்யப்பட்டு அவரது உடலை ஏரியில் வீசி சென்றார்களா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






