தொழில்அதிபர் வீட்டு முன் பெண் ஊழியர் தீக்குளிப்பு


தொழில்அதிபர் வீட்டு முன் பெண் ஊழியர் தீக்குளிப்பு
x

தொழில்அதிபர் வீட்டு முன் பெண் ஊழியர் தீக்குளிப்பு

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் பாலியல் தொல்லையால் தொழில்அதிபர் வீட்டு முன் பெண் ஊழியர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். 6 முறை கருக்கலைப்பு செய்ததாக அவர் எழுதிய பரபரப்பு கடிதத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தீக்குளிப்பு

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள கருணாபுரத்தை சேர்ந்த 37 வயது பெண், கணவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். பவானியில் உள்ள டைல்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று அந்த பெண் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள அந்த டைல்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டுக்கு சென்றார். தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், மருத்துவ செலவுக்கு பணம் வேண்டும் என்றும் கேட்டுள்ளார். ஆனால் உரிமையாளர் கொடுக்க மறுக்கவே, அந்த பெண் அந்த வீட்டின் கழிவறைக்கு சென்று, ஏற்கனவே கேனில் எடுத்து வந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீவைத்துக்கொண்டார். இதனால் தொழில் அதிபர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஆர்.எஸ்.புரம் போலீசுக்கு தகவல் கொடுத்தார். போலீசார் அந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

6 முறை கர்ப்பம்

ஆர்.எஸ்.புரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தஜோதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். அந்த பெண் தீக்குளிப்பதற்கு முன்பாக செல்போனில் வீடியோ மற்றும் ஒரு கடிதத்தை எழுதி உறவினர்களுக்கு செல்போனில் அனுப்பி உள்ளார். அந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர். அதில் கூறி இருப்பதாவது:-

நான் கணவரை விட்டு பிரிந்து எனது தாயார் வீட்டில் வசித்து வருகிறேன். கடந்த 11 ஆண்டுகளாக டைல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறேன். அந்த நிறுவனத்தின் உரிமையாளருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். குழந்தைகள் கிடையாது. அவர் என்னை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார். இதனால் நான் கர்ப்பம் தரித்தேன். இதுகுறித்து அவரிடம் நான் கூறியபோது, கர்ப்பத்தை கலைத்துவிடு என்று கூறினார். நானும் கலைத்துவிட்டேன். இப்படி 6 முறை கர்ப்பம் தரித்து அதனை கலைத்துள்ளேன். இது எனது முதலாளியின் மனைவிக்கும் தெரியும்.

கடிதம் சிக்கியது

6 முறை கருக்கலைப்பு செய்ததால் எனக்கு கடும் வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் நான் அவரிடம் சென்று செலவுக்கு பணம் கேட்டு தரமறுத்ததுடன் என்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டினர். நான் இறந்தால் எனது மரணத்துக்கு நான் வேலை பார்த்த நிறுவனத்தின் உரிமையாளர், அவருடைய மனைவி மற்றும் உறவினர்கள் உள்பட 4 பேர் மட்டும் காரணமாவார்கள். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தை கைப்பற்றி விசாரணை நடைபெறுகிறது. அந்த பெண்ணின் நிலைமையும் கவலைக்கிடமாக உள்ளது. இதுகுறித்து போலீசார் கூறும்போது, தீக்குளித்த பெண் பாலியல் தொல்லை காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம். ஆகவே தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு அதில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.


Next Story