மாணவர்களுடன் காலை உணவு திட்ட பெண் ஊழியர் திடீர் போராட்டம்
சேத்தியாத்தோப்பு அருகே பணி நீக்கம் செய்யப்பட்டதால் ஆத்திரம் அடைந்த காலை உணவு திட்ட பெண் ஊழியர் மாணவர்களுடன் பள்ளியை விட்டு வெளியேறி திடீர் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேத்தியாத்தோப்பு
அரசு தொடக்கப்பள்ளி
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த ஆண்டிபாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு அதே பகுதியை சேர்ந்த அடலின் ரெக்சின்(வயது 27), செல்வராணி(31) மற்றும் பரமேஸ்வரி(34) ஆகிய 3 பேரும் காலை உணவு திட்டத்தில் சமையலர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் சமையல் செய்வதில் இவர்களுக்கிடையே பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அடலின் ரெக்சின், செல்வராணி ஆகிய இருவரையும் வேலைக்கு வர வேண்டாம் என்று காலை உணவு திட்ட அதிகாரி செந்தமிழ்செல்வி கூறியதாக தொிகிறது.
திடீர் போராட்டம்
இதனால் ஆத்திரமடைந்த அடலின்ரெக்சின் பள்ளியில் படித்த 25 மாணவர்களில் 21 பேரை அழைத்துக்கொண்டு பள்ளி வளாகத்தை விட்டு வெளியேறி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுபற்றிய தகவல் அறிந்து வந்த மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் தேவராஜன், வட்டார கல்வி அலுவலர் அறிவழகன், வட்டார வளர்ச்சி அலுவலர் சுகுமாரன், காலை உணவு திட்ட அலுவலர் செந்தமிழ்செல்வி ஆகியோர் பணிநீக்கம் செய்யப்பட்ட அடலின்ரெக்சின் மற்றும் கிராம மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.
சுழற்சி முறையில்
இதில் காலை உணவு திட்ட பெண் ஊழியர்கள் அடலின் ரெக்சின், செல்வராணி ஆகியோரை பணியில் சேர்த்துக் கொள்ளவும், 3 பேரும் சுழற்சி முறையில் தலா ஒரு மாதம் பொறுப்பாளராக நியமிக்கவும் கலெக்டரின் நேர்முக உதவியாளர் தேவராஜன் உத்தரவிட்டார். மேலும் இதற்கு கிடைக்கும் ஊதியத்தை 3 பேரும் சமமாக பிரித்து கொள்ளவும் அவர் அறிவுறுத்தினார்.
இதை ஏற்றுக்கொண்ட அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பள்ளி வளாகத்தை விட்டு சென்று மாணவர்கள் மீண்டும் பள்ளிக்கு திரும்பி வந்தனர். மாணவர்களுக்கு சிறப்பான முறையில் காலை உணவு வழங்க வேண்டும் என 3 ஊழியா்களிடமும் கலெக்டரின் நேர்முக உதவியாளர் அறிவுரை வழங்கினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.