தனியார் நிறுவன பெண் ஊழியரை கடத்த முயற்சி-போலீசார் விசாரணை
மதுரையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண் ஊழியரை கடத்த முயற்சி செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மதுரையில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண் ஊழியரை கடத்த முயற்சி செய்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பெண்ணை கடத்த முயற்சி
மதுரை சொக்கிக்குளம் லேடி டோக் பெண்கள் கல்லூரி அருகே உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இளம் பெண் ஒருவர் நேற்று காலை நடந்து சென்று கொண்டிருந்தார். ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் அந்த பெண் வந்த போது 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்தது. பின்னர் அந்த கும்பல் இளம்பெண்ணை அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் கடத்த முயற்சி செய்தது. உடனே அந்த பெண் சத்தம் போட்டதும் அங்கிருந்தவர்கள் அதனை பெரிதாக கண்டு கொள்ள வில்லை.
அந்த நேரத்தில் அந்த வழியாக அண்ணாநகரை சேர்ந்த வக்கீல் முத்துக்குமார் சென்றுள்ளார். அவர் இளம்பெண்ணிடம் தகராறு செய்தவர்களிடம் சென்று விசாரிக்க சென்றார். மேலும் தல்லாகுளம் போலீசாருக்கும் தகவல் கொடுத்தார். அப்போது தகராறில் ஈடுபட்டவர்கள் தப்பியோடினர். அதில் ஒரு வாலிபரை மட்டும் வக்கீல் பிடித்து வைத்திருந்தார்.
போலீசார் விசாரணை
இதற்கிடையில் போலீசார் விரைந்து வந்து பிடிபட்ட வாலிபரையும் இளம்பெண்ணையும் தல்லாகுளம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அதில் அந்த பெண் திண்டுக்கல்லை சேர்ந்தவர் என்றும், அந்த வாலிபர் கரூரை சேர்ந்த பாலா என்பதும் தெரியவந்தது. மேலும் அவர்கள் இருவரும் ஒரே இடத்தில் வேலை பார்த்த போது காதலித்து தாலி கட்டி திருமணம் செய்து கொண்டதாகவும், அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் அந்த பெண் தாலியை கழற்றி வீசி விட்டதாகவும், 20 பவுன் நகையை கொடுத்ததாக அந்த வாலிபர் தெரிவித்தார்.
ஆனால் அந்த பெண், நாங்கள் இருவரும் பழகினோம், அது தவிர எங்களுக்குள் வேறு எதுவும் இல்லை என்று தெரிவித்தார். அதை தொடர்ந்து போலீசார் அவர்கள் இருவரின் பெற்றோரையும் போலீஸ் நிலையத்திற்கு வருமாறு தகவல் தெரிவித்தனர். மதுரையில் பெண்ணை கடத்த முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.