பெண் கூட்டு பலாத்காரம்; டிரைவர் உள்பட 4 பேர் கைது

சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த வழக்கில் டிரைவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் சம்பவத்தன்று சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் காயங்களுடன் சிகிச்சைக்காக சேர்ந்தார். அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சங்கரன்கோவில் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் அங்கு விரைந்து சென்று பெண்ணிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் அந்த பெண்ணின் கணவர் இறந்து விட்டார். இதனால் தனது குழந்தைகளை காப்பாற்றுவதற்காக அவர் நெல்லைக்கு வந்து ஒரு கடையில் வேலைக்கு சேர்ந்தார். அங்கு அவர் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது, நெல்லை வண்ணார்பேட்டை சாலை தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவரான முருகன் (வயது 44) என்பவருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று காலை அந்த பெண்ணை நெல்லை மாநகர பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளைக்கு முருகன் அழைத்து சென்றுள்ளார்.
அப்போது அங்கு மறைந்திருந்த தனது நண்பர்களான வண்ணார்பேட்டையை சேர்ந்த மணிகண்டன் (32), பேராட்சி (31) மற்றும் அய்யாசாமி ஆகியோரை வரவழைத்துள்ளார். பின்னர் 4 பேரும் சேர்ந்து தங்களது ஆசைக்கு இணங்குமாறு அந்த பெண்ணை வற்புறுத்தி உள்ளனர். ஆனால் அந்த பெண் மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் அவரை அடித்து உதைத்தனர். பின்னர் அவரை கட்டாயப்படுத்தி கூட்டு பலாத்காரம் செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
இதில் மிகவும் சோர்வடைந்த அந்த பெண் தனது வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். ஆனால் காயங்களால் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அந்த பெண், சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார், என்ற திடுக்கிடும் தகவல் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக சங்கரன்கோவில் போலீசார் நெல்லை மாநகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவுப்படி பாளையங்கோட்டை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமேசுவரி, அந்த பெண்ணிடம் நேரில் விசாரணை நடத்தினார்.
பின்னர் இது தொடர்பாக ஆட்டோ டிரைவர் முருகன் உள்பட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தார். நேற்று 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.