பெண் கஞ்சா வியாபாரி கைது
தேனி அருகே பெண் கஞ்சா வியாபாரியை போலீசார் கைது செய்தனர்.
தேனி அருகே கோடாங்கிபட்டி-போடேந்திரபுரம் சாலையில் கடந்த 7-ந்தேதி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த கோடாங்கிபட்டியை சேர்ந்த சரஸ்வதி (வயது 55), மாணிக்காபுரத்தை சேர்ந்த அஜித் (21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்களிடம் 2 கிலோ 700 கிராம் கஞ்சா இருந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் கோடாங்கிபட்டியை சேர்ந்த சந்திரா என்பவரிடம் இந்த கஞ்சாவை வாங்கியதாக கூறினார். இதையடுத்து சந்திராவை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் நேற்று சந்திராவை கைது செய்தனர்.
அவரிடம் போலீசார் விசாரணை நடத்திய போது, குள்ளப்பகவுண்டன்பட்டியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் கஞ்சா வாங்கியதாக கூறினார். அதன்பேரில், குள்ளப்பகவுண்டன்பட்டியை சேர்ந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து சந்திராவை கைது செய்த போலீசார் மேலும் 3 பெண் உள்பட 4 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களிடம் இருந்து கஞ்சா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், எவ்வளவு மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. கைதான நபர்களிடம் நடந்து வரும் விசாரணை முடிவில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.