ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் இன்ஸ்பெக்டர் கைது
லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் மாலதியை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று காலை கைது செய்தனர்.
லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் மாலதியை லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று காலை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர்
திருச்சி மாவட்டம் லால்குடி தாலுகா வாளாடியை சேர்ந்த மாணிக்கம் மகன் யுவராஜ். இவரது குடும்பத்திற்கும், அருகில் உள்ள ஜெகதீசன் என்பவரின் குடும்பத்திற்கும் பிரச்சினை இருந்து வந்தது. இதுதொடர்பாக லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் யுவராஜ் புகார் அளித்தார்.
அதன்பேரில் ஜெகதீசன் மீது கடந்த மாதம் 2-ந்தேதி போக்சோ சட்டத்தின் கீழ் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாலதி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தார். இந்த வழக்கு புலன் விசாரணையில் இருந்து வரும் நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்றால், அதற்காக தனக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சமாக தரவேண்டும் என்று இன்ஸ்பெக்டர் மாலதி கேட்டுள்ளார்.
ரூ.5 ஆயிரம் லஞ்சம்
அந்த தொகையை 13-ந்தேதி (நேற்று) அன்று காலை தன்னிடம் லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கே வந்து கொடுக்குமாறு கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத யுவராஜ் திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் நிலையத்திற்கு சென்று இதுபற்றி ஆதாரங்களுடன் புகார் அளித்தார்.அதன்பேரில், திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர், அவர்கள் யுவராஜிடம் ரசாயன பொடி தடவிய 500 ரூபாய் நோட்டுகளை ரூ.5 ஆயிரத்துக்கு கொடுத்து, அதை லஞ்சம் கேட்ட பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாலதியிடம், அவர் கூறியபடி போலீஸ் நிலையத்துக்கு சென்று கொடுக்கும்படி கூறினர்.
கையும் களவுமாக கைது
அதன்படி, நேற்று காலை 10 மணி அளவில் லால்குடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு யுவராஜ் ரசாயன பொடி தடவிய பணத்துடன் சென்றார். பின்னர் அங்கிருந்த பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாலதியிடம், யுவராஜ் லஞ்ச பணத்தை கொடுத்தார்.அப்போது, லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், சேவியர்ராணி, பிரசன்னவெங்கடேசன், பாலமுருகன் மற்றும் போலீசார் அங்கு ஏற்கனவே மாறுவேடத்தில் நின்று கொண்டிருந்தனர். பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் லஞ்சப்பணத்தை பெற்றதும், அவரை கையும் களவுமாக அரசு சாட்சி முன்னிலையில் பிடித்தனர்.
சிறையில் அடைப்பு
இதைத்தொடர்ந்து, அவரிடம் இருந்து லஞ்ச பணத்தை கைப்பற்றிய போலீசார், மாலதியை கைது செய்து வேனில் ஏற்றி, அவருடைய வீட்டுக்கு அழைத்து சென்றனர். அங்கு சோதனை நடத்திய போலீசார், அதன்பிறகு அவரை திருச்சிக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து வந்தனர்.
பின்னர், கைது செய்யப்பட்ட மாலதியை திருச்சியில் உள்ள ஊழல் தடுப்பு சட்டத்திற்கான சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று பிற்பகல் ஆஜர்படுத்தினர். அவரிடம் விசாரணை நடத்திய சிறப்பு நீதிபதி ஆர்.கார்த்திகேயன், மாலதியை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் திருச்சி பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும், லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாலதி மீது துறைரீதியிலான நடவடிக்கை எடுக்க திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமாருக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.
பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போது போலீசாரே பொறி வைத்து பிடித்த சம்பவம் லால்குடி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.