பெண் இன்ஸ்பெக்டர் தொல்லையால் ராஜினாமா செய்கிறேன்


பெண் இன்ஸ்பெக்டர் தொல்லையால் ராஜினாமா செய்கிறேன்
x
தினத்தந்தி 19 March 2023 12:15 AM IST (Updated: 19 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

பெண் இன்ஸ்பெக்டர் தொல்லையால் ராஜினாமா செய்கிறேன்

கோயம்புத்தூர்

சோவை

பெண் இன்ஸ்பெக்டர் தொல்லையால் ராஜினாமா செய்கிறேன் என்று திருநங்கை காவலர் கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.

திருநங்கை காவலர்

கோவையைச் சேர்ந்தவர் நஸ்ரியா. திருநங்கையான இவர் காவல் துறையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். சமீபத்தில் குழந்தைகள், பெண்கள் கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டு இருந்தார்.

இந்தநிலையில் அவர் நேற்று காலை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வந்து ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:- கடந்த ஜனவரி மாதம் பிப்ரவரி மாதம் எனக்கு மேல் அதிகாரியாக பணியாற்றிய பெண் இன்ஸ்பெக்டர் என்னை பணி செய்ய விடாமல் பழிவாங்கும் நோக்கத்துடன் செயல்பட்டார். என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலை செய்யும் அளவுக்கு தூண்டினார். இதனால் ஜனவரி 16-ந் தேதி 18 தூக்க மாத்திரைகள் தின்று தற்கொலைக்கு முயன்றேன்.

ராஜினாமா செய்கிறேன்

பின்னர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பணிக்கு வந்தேன். இன்ஸ்பெக்டருக்கு ஆதரவாக சிலர் செயல்பட்டனர்.

இன்ஸ்பெக்டர் பற்றி 3 முறை உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் செய்து விட்டேன். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மேலும் இன்ஸ்பெக்டர் என்னை அதிக மன உளைச்சலுக்கு ஆளாக்கினார்.

தவறு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்காமல் பாதிக்கப்பட்டவருக்கு தண்டனை வழங்குகிறார்கள்.

இதனால் நான் இந்த பணியில் இருந்து விலகிக் கொள்கிறேன். எனக்கு அரசால் வழங்கப்பட்ட சீருடை மற்றும் இதரபொருட்களை ஒப்படைத்து விட்டேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

போலீஸ் கமிஷனர் பேட்டி

இதுகுறித்து போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறுகையில், நஸ்ரியாவிடம் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவர் மீது ஏற்கனவே ஒழுங்கீன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர் கூறிய புகார் மீது வடக்கு துணை கமிஷனர் சந்தீசிடம் விசாரணை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின்னரே ராஜினாமா கடிதத்தை ஏற்பது குறித்து முடிவு செய்யப்படும். என்றார்.


1 More update

Next Story