பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கு:முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்டி.ஐ.ஜி. ஆனிவிஜயா உள்ளிட்ட 3 பேரிடம் மீண்டும் குறுக்கு விசாரணை கேட்டு மனுதாக்கல்


பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கு:முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்டி.ஐ.ஜி. ஆனிவிஜயா உள்ளிட்ட 3 பேரிடம் மீண்டும் குறுக்கு விசாரணை கேட்டு மனுதாக்கல்
x
தினத்தந்தி 4 March 2023 6:45 PM GMT (Updated: 4 March 2023 6:46 PM GMT)

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. விழுப்புரம் கோர்ட்டில் ஆஜரானார். இவ்வழக்கில் டி.ஐ.ஜி. ஆனிவிஜயா உள்ளிட்ட 3 பேரிடம் மீண்டும் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம்


பெண் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. பாலியல் தொல்லை அளித்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகளின் விசாரணை முடிந்த நிலையில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரிடம் விசாரணை நடந்து வருவதால் இவ்வழக்கு தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ஆஜரானார். செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு ஆஜராகவில்லை. அவர் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து மனுதாக்கல் செய்யப்பட்டது.

3 பேரிடம் மீண்டும் குறுக்கு விசாரணை

மேலும் இவ்வழக்கில் நேற்று சாட்சிகள் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி புஷ்பராணி, கடந்த 3 முறை நடந்த வழக்கு விசாரணையின்போது சாட்சிகள் யாரும் ஆஜராகாமல் இருப்பதற்கு காரணம் என்ன? என்றும் இவ்வழக்கை ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என்ற நிலையில் சாட்சிகள் ஆஜராகாமல் இருந்தால் எப்படி வழக்கை விரைந்து முடிக்க முடியும் என்று சி.பி.சி.ஐ.டி. போலீசாரை கண்டித்தார். அடுத்த விசாரணையின்போது சாட்சிகள் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் இவ்வழக்கு தொடர்பாக ஏற்கனவே விசாரிக்கப்பட்ட சாட்சிகளான போலீஸ் டி.ஐ.ஜி. ஆனிவிஜயா, போலீசார்கள் பாலமுருகன், சந்திரசேகர் ஆகிய 3 பேரிடம் மீண்டும் குறுக்கு விசாரணை நடத்த அனுமதி கேட்டு முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. தரப்பு வக்கீல் மனுதாக்கல் செய்தார்.

இம்மனுவுக்கு அரசு தரப்பில் பதில் மனுதாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கும்படி அரசு தரப்பு வக்கீல் வைத்தியநாதன் கூறினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி புஷ்பராணி, இவ்வழக்கு விசாரணையை 7-ந் தேதிக்கு (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


Next Story