பெண் ஐ.டி. ஊழியரிடம் ரூ.19 லட்சம் மோசடி
இணையதளம் மூலம் வரன் தேடிய ஐ.டி. பெண் ஊழியரிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ரூ.19 லட்சம் மோசடி செய்யப்பட்டது
இணையதளம் மூலம் வரன் தேடிய ஐ.டி. பெண் ஊழியரிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ரூ.19 லட்சம் மோசடி செய்யப்பட்டது.
இணையதளத்தில் பதிவு
கோவை ஒத்தக்கால்மண்டபத்தை சேர்ந்த 36 வயது பெண் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி விவாகரத்தாகி விட்டது. எனவே அவர் 2-வது திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார்.
இதற்காக அவர் ஆன்லைன் திருமண இணையதளத்தில் தனது சுயவிவரங்களை பதிவு செய்தார். அதை பார்த்து விட்டு கடந்த மார்ச் 12-ந் தேதி அந்த ஐ.டி. பெண் ஊழியரை ஒருவர் தொடர்பு கொண்டார்.
அவர், தனது பெயர் மார்க்கஸ் சிங் என்றும், இங்கிலாந்தில் பணியாற்றி வருவதாகவும், தமிழகத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பி இணையதளத்தில் பதிவு செய்து இருந்ததாகவும் கூறினார்.
சிகிச்சைக்கு பணம்
அதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் செல்போனில் பேசி வந்தனர். அப்போது மார்க்கஸ் சிங் அந்த பெண்ணிற்கு காதல் வலை விரித்தார். பின்னர் திருமணம் செய்து ெகாள்வதாக ஆசை வார்த்தை கூறினார். அதில் அந்த பெண் மயங்கினார். இதை தெரிந்து கொண்ட மார்க்கஸ் சிங் தனது தாயாருக்கு உடல் நிலை சரி இல்லாததால் சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதாக கூறினார்.
அதை நம்பிய அந்த பெண், வங்கியில் ரூ.10 லட்சம் கடன் பெற்றார். பின்னர் அந்த பெண், மார்க்கஸ்சிங் கூறிய வங்கி கணக்கிற்கு பல்வேறு கட்டங்களாக ஆன்லைன் மூலம் பணம் அனுப்பி வைத்தார்.
அதன்பிறகும் அவர், தன் தாயின் சிகிச் சைக்கு கூடுதல் பணம் தேவைப்படுகிறது என்று கேட்டுள்ளார்.
விசாரணை
இதனால் அந்த பெண் ஐ.டி. ஊழியர் தனது திருமணத்திற்காக சிறுக, சிறுக சேர்த்து வைத்திருந்த நகைகளை அடகு வைத்து ரூ.9 லட்சம் பணம் வாங்கினார்.
அந்த பணத்தையும், மார்க்கஸ்சிங் கூறிய வங்கி கணக்கு எண்ணிற்கு ஆன்லைன் மூலம் அனுப்பி வைத்தார். அவர், மொத்தம் ரூ.19 லட்சத்தை பெற்றுக்கொண்ட பிறகு அந்த பெண்ணை தொடர்பு கொள்ள வில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் செல்போனில் அவரை தொடர்பு கொள்ள முயன்றார். அப்போது அந்த செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்த பெண் கொடுத்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயதேவி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.