கல்லூரி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கிய பெண் சப்-இன்ஸ்பெக்டர்-வீடியோ வைரல்


திருப்பத்தூரில் அரசு பஸ்களில் செல்லும் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு, பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

திருப்பத்தூர்

திருப்பத்தூரில் அரசு பஸ்களில் செல்லும் கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு, பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அறிவுரை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆய்வு

திருப்பத்தூரில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பஸ்களில் மாணவர்கள் படிகளில் தொங்கிக்கொண்டும், மாணவ-மாணவிகள் அருகருகே உட்கார்ந்து கொண்டும், கிண்டல் அடித்து செல்வதாகவும் பொதுமக்கள் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.

இந்தநிலையில் திருப்பத்தூர் போக்குவரத்து சிறப்பு பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரூபி திடீரென திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர் செல்ல தயாராக இருந்த பஸ்களில் ஏறி ஆய்வு நடத்தினார். அப்போது சில பஸ்களில் மாணவ-மாணவிகள் அருகருகே அமர்ந்து சிரித்து பேசிக்கொண்டு இருந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் மாணவ-மாணவிகளுக்கு சில அறிவுரைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

மாணவ-மாணவிகளுக்கு அறிவுரை

கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் பஸ்களில் அருகருகே அமர்ந்து செல்வதால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதாக தொடர்ந்து புகார்கள் வருகிறது. மேலும் தொட்டுதொட்டு பேசுவது, கிண்டல் செய்வது, பார்வையால் பேசுவது எல்லாவற்றிற்கும் வழக்கு இருக்கிறது.

மாணவர்கள் காலியாக செல்லும் பஸ்களில் ஏறுவது கிடையாது. கல்லூரிக்கு படிக்கத்தான் பெற்றோர்கள் அனுப்புகின்றனர். நீங்கள் படிப்பில் கவனம் செலுத்தி வாழ்க்கையில் முன்னேறுவதற்கான வழியை மேற்கொள்ளுங்கள். நான் பணிக்கு சேர்ந்து 25 வருடங்களை கடந்து விட்டது. என்னை விட வயதில் குறைந்தவர்கள் உயர்ந்த பதவிக்கு சென்றுவிட்டு இன்று எனது பெயரை செல்லி அழைக்கின்றனர்.

சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

இந்த நிலை உங்களுக்கு வரக்கூடாது. நீங்களும் உயர்ந்த பதவிக்கு செல்ல வேண்டும். உங்கள் பெற்றோர் எவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வைக்கின்றனர் என்பதை உணர்ந்து நீங்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சிறப்பு பெண் சப்-இன்ஸ்பெக்டரின் இந்த நடவடிக்கை மற்றும் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கியது சமூக வலைதளங்களில் வீடியோ வைரலாக பரவியது


Next Story