தூக்குப்போட்டு பெண் தற்கொலை


தூக்குப்போட்டு பெண் தற்கொலை
x

திருமணம் ஆன மூன்று ஆண்டுகளில் கணவர் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதால் மனம் உடைந்த மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மயிலாடுதுறை

கொள்ளிடம்:

திருமணம் ஆன மூன்று ஆண்டுகளில் கணவர் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதால் மனம் உடைந்த மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

2 வயது பெண் குழந்தை

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே மயிலக்கோயில் கிராமத்தை சேர்ந்த குணசேகரன் மகள் இலக்கியாவுக்கும்(வயது 28)், கள்ளக்குறிச்சியை சேர்ந்த அன்புதாசன் என்பவரின் மகன் பாண்டியராஜனுக்கும்(35) திருமணம் ஆகி 3 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 வயதில் இதழினி என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் பாண்டியராஜன் வெளிநாடு சென்று விட்டு மீண்டும் கடந்த ஏப்ரல் மாதம் கள்ளக்குறிச்சியில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பினார். அங்கு கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்தது.

விவாகரத்து நோட்டீஸ்

இதனைத்தொடர்ந்து இலக்கியா மயிலக்கோயில் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு கடந்த 10-ந் தேதி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பாண்டியராஜன் அனுப்பிய விவாகரத்து நோட்டீஸ் இலக்கியாவுக்கு தபால் துறை மூலம் வந்தது.

தனது கணவர் தனக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதால் இலக்கியா மனம் உடைந்தார். திருமணம் ஆன மூன்று ஆண்டுகளிலேயே தனக்கு இப்படியொரு நோட்டீஸ் வரும் என்று எதிர்பார்க்காததால் இலக்கியாவால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு இலக்கியா தனது வீட்டிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து இலக்கியாவின் தந்தை குணசேகரன் கொள்ளிடம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இலக்கியாவின் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உதவி கலெக்டர் விசாரணை

திருமணம் ஆன 3 ஆண்டுகளில் இலக்கியா தற்கொலை செய்து கொண்டதால் அவரது இறப்பு குறித்து சீர்காழி உதவி கலெக்டர் அர்ச்சனா விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story