பெண் சரமாரி வெட்டிக்கொலை


பெண் சரமாரி வெட்டிக்கொலை
x

எழுமலை அருகே பெண்ணை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த அவருடைய கணவர் கைது செய்யப்பட்டார்.

மதுரை

உசிலம்பட்டி,

எழுமலை அருகே பெண்ணை சரமாரியாக வெட்டிக்கொலை செய்த அவருடைய கணவர் கைது செய்யப்பட்டார்.

குடும்ப தகராறு

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலையை அடுத்துள்ள பள்ளபட்டியை சேர்ந்தவர் சவுந்திரபாண்டி(வயது 38). இவர் சென்னையில் லாரி டிரைவராக பணி புரிந்து வருகிறார். இவருடைய மனைவி தங்கமீனா (29). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தங்கமீனா கடந்த சில ஆண்டுகளாக கணவரை பிரிந்து ஆத்தங்கரைப்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது மனைவியை சந்திக்க ஆத்தங்கரைப்பட்டிக்கு சவுந்திரபாண்டி சென்றார். அப்போது ஊரில் உள்ள மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இதனால் ஊர் மந்தையில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியை காண அப்பகுதி மக்கள் சென்று விட்டனர்.

வெட்டிக்கொலை

தங்கமீனாவும், அவரது பெற்றோரும் வீட்டில் இருந்துள்ளனர். அப்போது அங்கு வந்த சவுந்தரபாண்டிக்கும், தங்கமீனாவுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த சவுந்திரபாண்டி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தங்கமீனாவை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த தங்கமீனா ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதை பார்த்து அவருடைய பெற்றோர் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். இதற்கிடையே சவுந்திரபாண்டி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்த கொலை சம்பவம் குறித்து தகவலறிந்த எழுமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம், சப்-இன்ஸ்பெக்டர் முருகதாஸ் மற்றும் போலீசார் அங்கு சென்று தங்கமீனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கா மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கைது

இதற்கிடையே சவுந்தரபாண்டி நடந்த சம்பவம் குறித்து கூறி திருமாணிக்கம் கிராம நிர்வாக அலுவலர் கவாஸ்கரிடம் சரணடைந்தார். பின்னர் அவர், சவுந்தரபாண்டியை எழுமலை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சவுந்திரபாண்டியை கைது செய்தனர். குடும்ப தகராறில் மனைவியை கணவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story