வேர்க்கடலை பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகள்
திமிரி பகுதிகளில் வேர்க்கடலை பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை தடுக்க நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காட்டுப் பன்றிகள்
திமிரி வட்டார பகுதிகளில் அதிக அளவில் மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். திமிரியை அடுத்த பிண்டித்தாங்கல் கிராமத்தில் விவசாயிகள் வேர்க்கடலை உள்ளிட்டவைகளை பயிர் செய்துள்ளனர்.
இந்தநிலையில் இரவு நேரங்களில் அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள வேர்க்கடலை செடிகளை காட்டு பன்றிகள் சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
விவசாயிகள் கோரிக்கை
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில் எங்கள் கிராமத்தில் ஏரிக்கரை பகுதியில் உள்ள விளைநிலத்தில் வேர்க்கடலை பயிர் செய்துள்ளோம். அவை அறுவடைக்கு தயாராகியுள்ள நிலையில் இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் வேருடன் தோண்டி எடுத்து சேதப்படுத்துகின்றன. இதனால் நாங்கள் விவசாயம் செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளோம்.
எனவே சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டு விவசாய நிலத்திற்குள் காட்டுப் பன்றிகள் நுழைய முடியாதபடி வேலி அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.