மானிய விலையில் உரம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்


மானிய விலையில் உரம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம்
x

மானிய விலையில் உரம் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என அதிகாரி தெரிவித்தார்.

ராமநாதபுரம்

ஆர்.எஸ்.மங்கலம்,

ஆர்.எஸ்.மங்கலம் யூனியனில் நெல் பிரதான பயிராக சம்பா பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 2021-22-ம் ஆண்டில் நெல் 20,732 எக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் அனைவரும் உழவுப்பணிகள் மற்றும் முட்செடிகளை அகற்றுதல், வரப்பு மற்றும் வாய்க்கால்கள் சீரமைத்தல் போன்ற பணிகளை மும்முரமாக மேற்கொண்டு விவசாயத்துக்கு தயாராகி வருகின்றனர்.

விவசாயிகள் தரமான உயர் விளைச்சல் ரகங்களை பயிரிட்டு அதிக வருமானம் ஈட்டுவதற்காக வேளாண்மை விரிவாக்க மையத்தில் தரமான சான்று பெற்ற உயர் விளைச்சல் நெல் ரகங்களான ஆர்.என்.ஆர்-15048, என்.எல்.ஆர்-34449, பி.பி.டி.-5204 மற்றும் டி.கே.எம்-13 போன்ற நெல் ரக விதைகள் 90 மெட்ரிக் டன்கள் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் மற்றும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டங்களின் வாயிலாக விவசாயிகளுக்கு 50 சதவீதம் மானியத்தில் நெல் விதைகள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் திரவ உயிர் உரங்கள் மற்றும் நெல் நுண்ணூட்ட உரங்களும் 50 சதவீதம் மானியத்தில் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் (அரிசி) திட்டத்தில் விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. எனவே விவசாயிகள் தங்களது நிலத்திற்குரிய கணினி பட்டா, ஆதார் எண் ஆகியவற்றை வேளாண்மை விரிவாக்க மையத்தில் அளித்து மானியத்தில் நெல்விதை, உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரங்களை பெறலாம். இந்த தகவலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராஜலெட்சுமி தெரிவித்துள்ளார்.


Next Story