கேரள சமாஜத்தின் சார்பில்தர்மபுரியில் ஓணம் திருவிழா
தர்மபுரி:
தர்மபுரியில் கேரள சமாஜத்தின் சார்பில் ஓணம் திருவிழா ஸ்ரீ ராமா கூட்ட அரங்கில் நடந்தது. கேரள சமாஜ தலைவர் கிருஷ்ணன் உன்னி தலைமை தாங்கினார். செயலாளர் ஹரிகுமார் வரவேற்று பேசினார். துணைத்தலைவர் நாராயணசாமி, பொருளாளர் சத்திய நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் அரிமா சங்க முன்னாள் மாவட்ட ஆளுனர் டி.என்.வி. செல்வராஜ், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்துகொண்டு கேரள சமாஜ உறுப்பினர்களுக்கு உதவித்தொகை வழங்கினர். இந்த விழாவில் மகாபலி சக்கரவர்த்தி வேடமணிந்த ஒருவர் பொதுமக்களுக்கு ஆசி வழங்கினார். விழாவையொட்டி கேரள பெண்களுக்கு அத்தப்பூ கோல போட்டி நடைபெற்றது. மேலும் கேரள கிராமிய கலை நிகழ்ச்சிகளும், கேரள பாரம்பரிய கை கொட்டிக்களி நடனமும் நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான கேரள மக்கள் கலந்து கொண்டனர். முடிவில் இணைச் செயலாளர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.