தளி அருகே கவுரம்மா கோவில் திருவிழா தோள்களில் தேரை சுமந்து வந்த பக்தர்கள்


தினத்தந்தி 30 Sep 2022 6:45 PM GMT (Updated: 30 Sep 2022 6:45 PM GMT)

தளி அருகே கவுரம்மா கோவில் திருவிழா தோள்களில் தேரை சுமந்து வந்த பக்தர்கள்

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

தளி அருகே கவுரம்மா கோவில் திருவிழாவையொட்டி தோள்களில் தேரை பக்தர்கள் சுமந்து வந்து வழிபட்டனர்.

கோவில் திருவிழா

கிருஷ்ணகிரி மாவட்டம், தளி அருகே உள்ள கும்ளாபுரம் கிராமத்தில் பழமை வாய்ந்த கவுரம்மா கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தேர்த்திருவிழா விமரிசையாக நடைபெறும்.

இந்த திருவிழாவையொட்டி, கவுரம்மா மற்றும் விநாயகர் தெய்வங்களின் சிலைகள் அங்குள்ள 7 ஏரிகளில் இருந்து மண் மற்றும் தண்ணீர் எடுத்து வந்து வடிவமைக்கப்பட்டு, கும்ளாபுரம் கிராமத்தில் உள்ள கவுரம்மா தேவி கோவிலில் ஒரு மாதம் சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.

அதன்பின்னர் 2 தெய்வங்களின் சிலைகளும் அலங்கரிக்கப்பட்ட 2 தேர்களில் வைக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்து சென்று கவுரம்மா ஏரியில் கரைப்பது வழக்கம். இந்த திருவிழா ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வருகிறது.

தேரை சுமந்த பக்தர்கள்

அந்த வகையில் இந்த ஆண்டு தேர்த்திருவிழாவிற்காக கடந்த ஒரு மாத காலமாக 7 ஏரிகளில் இருந்து மண் மற்றும் தண்ணீர் எடுத்து வந்து செய்யப்பட்ட கவுரம்மா மற்றும் விநாயகர் சிலைகள் கோவிலில் வைக்கப்பட்டு கடந்த ஒரு மாத காலமாக பூஜைகள் செய்யப்பட்டு வந்தன.

இதைத்தொடர்ந்து நேற்று கவுரம்மா, விநாயகர் தேர்த்திருவிழா நடைபெற்றது. கவுரம்மா மற்றும் விநாயகர் சிலைகள் கோவிலில் இருந்து மேளதாளங்கள் முழங்க எடுத்து வரப்பட்டு அலங்கரிக்கப்பட்ட பெரிய தேர்களில் அமர வைக்கப்பட்டது.

வழக்கமாக தேரோட்டம் என்றால் தேரை வடம் பிடித்து இழுத்து செல்வது வழக்கம். ஆனால் கவுரம்மா கோவில் திருவிழாவில் பக்தர்கள் கவுரம்மா மற்றும் விநாயகர் சிலைகள் உள்ள 2 தேர்களையும் தங்களது தோள்களில் சுமந்தபடி ஊர்வலமாக எடுத்து சென்றனர்.

சிலைகள் கரைப்பு

தேர்கள் மேளதாளங்கள் முழங்க கும்ளாபுரம் கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக எடுத்து செல்லப்பட்டது. இறுதியில் தேர்களை கவுரம்மா ஏரிக்கு கொண்டு சென்று பக்தர்கள் அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தி கவுரம்மா மற்றும் விநாயகர் சிலைகளை ஏரி நீரில் கரைத்தனர்.

இந்த தேர்த்திருவிழாவின் போது கவுரம்மா மற்றும் விநாயகருக்கு மூக்குத்தி, கம்மல், புடவை உள்ளிட்ட பல்வேறு வகையான சீர்வரிசை பொருட்களை வழங்கி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

இந்த திருவிழாவில் கும்ளாபுரம், தளி, தேன்கனிக்கோட்டை, ஓசூர் மற்றும் கர்நாடக மாநிலத்தின் ஆனேக்கல், சந்தாபுரம், பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 5 ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு கவுரம்மாவை வழிபட்டு சென்றனர்.


Next Story