பங்குனி பொங்கல் திருவிழா:உடலில் சேறு பூசி பக்தர்கள் வினோத வழிபாடு
எஸ்.புதூா் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பங்குனி பொங்கல் திருவிழாவையொட்டி உடலில் சேறு பூசிக்கொண்டு பக்தா்கள் வினோத வழிபாடு நடத்தினர்.
எஸ்.புதூர்
எஸ்.புதூா் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பங்குனி பொங்கல் திருவிழாவையொட்டி உடலில் சேறு பூசிக்கொண்டு பக்தா்கள் வினோத வழிபாடு நடத்தினர்.
பங்குனி பொங்கல் திருவிழா
எஸ்.புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான செட்டிகுறிச்சி, புழுதிபட்டி, படமிஞ்சி, கிழவயல், குறும்பலூர், குளத்துப்பட்டி, அரியாண்டிபட்டி, தர்மபட்டி, திருமலைக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் பங்குனி பொங்கல் திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
குறும்பலூர் செகுடப்பர் கோவிலில் காப்பு கட்டிய நாள் முதல் பெண்கள் கும்மி அடித்தும், ஆண்கள் வைந்தானை அடித்தும் வழிபாடு நடத்தினர். அதனை தொடர்ந்து பங்குனி பொங்கல் திருவிழா அன்று கிடாய், சேவல்களை பலியிட்டும் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனா்.
நேர்த்திக்கடன்
தொடர்ந்து முக்கிய நிகழ்வான நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பக்தர்கள் உடம்பில் சேறு, சகதி பூசியும், தெய்வங்கள், சிங்கம், புலி, கரடி, போலீஸ், வைக்கோல் பொம்மை, பெண் வேடம், மணமக்கள் வேடம் உள்ளிட்ட பல்வேறு வகையான மாறுவேடமணிந்தும், புலி குத்து எனும் வேடமணிந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். முடிவில் கொழுக்கட்டை, வைந்தானை குச்சிகள் சூறையிடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் கரும்பு தொட்டில்கள் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.