திருப்புவனம் சித்திரை திருவிழா வைகையில் இறங்கி காட்சியளித்த பாலகிருஷ்ண பெருமாள்
திருப்புவனம் சித்திரை திருவிழாவில் வைகையில் இறங்கி பாலகிருஷ்ண பெருமாள் காட்சியளித்தார்.
திருப்புவனம்
திருப்புவனம் கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற திருமால் அழகன் என்ற பாலகிருஷ்ண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா நிகழ்ச்சி வெகு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். ஒவ்வொரு வருடமும் பாலகிருஷ்ண பெருமாள் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சியளித்து மண்டகப்படிகளுக்கு செல்வார். இந்த வருடம் 125-வது சித்திரை திருவிழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் சுவாமிக்கு காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. அதை தொடர்ந்து நேற்று (வெள்ளிக்கிழமை) காலை தங்க முலாம் பூசப்பட்ட குதிரை வாகனத்தில் கோவிலில் இருந்து முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தார். நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் பாலகிருஷ்ண பெருமாள் சுவாமி வைகை ஆற்றில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
வைகை ஆற்றில் பாலகிருஷ்ண பெருமாளுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அது சமயம் வேடம் தரித்த பக்தர்கள் சாமி மீது தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். அதன் பின்பு நகரில் உள்ள சுமார் 15-க்கும் மேற்பட்ட பல்வேறு மண்டக படிகளில் சுவாமி எழுந்தருளினார். இன்று (சனிக்கிழமை) இரவு பூப்பல்லக்கில் சாமி எழுந்தருளி நகர்வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்து அருளாசி வழங்குகிறார். அதனை தொடர்ந்து உற்சவ சாந்தியுடன் திருவிழா முடிவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்களும், யாதவர் பண்பாட்டு கழகத்தினரும் செய்திருந்தனர்.