பள்ளித்தம்மம் புனித மூவரசர்கள் ஆலய சப்பர திருவிழா


பள்ளித்தம்மம் புனித மூவரசர்கள் ஆலய சப்பர திருவிழா
x
தினத்தந்தி 11 May 2023 12:15 AM IST (Updated: 11 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காளையார்கோவில் அருகே பள்ளித்தம்மத்தில் உள்ள புனித மூவரசர்கள் ஆலய சப்பர திருவிழா நடைபெற்றது. விழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

சிவகங்கை

காளையார்கோவில்,

காளையார்கோவில் அருகே பள்ளித்தம்மத்தில் உள்ள புனித மூவரசர்கள் ஆலய சப்பர திருவிழா நடைபெற்றது. விழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

புனித மூவரசர்கள் ஆலய திருவிழா

காளையார்கோவில் அருகே உள்ள பள்ளித்தம்மம் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமையான புனித மூவரசர்கள் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் சப்பர திருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

இந்தாண்டு விழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினந்தோறும் இரவு 7 மணிக்கு சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது.

விழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று காலையும் மூவரசர்கள் சப்பர விழா நடைபெற்றது.

முன்னதாக விழாவில் அனைத்து மதத்தை சேர்ந்தவர்கள் குழந்தை வரம், திருமண நடக்க வேண்டியும், வேலை கிடைக்கவேண்டியும் வேண்டுதல்கள் வைத்த பின்னர் அவை நிறைவேறியதும் ஆலயத்தில் பொங்கல் வைத்து புனித மூவரசர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

சப்பர பவனி

தொடர்ந்து இரவு ஆலயம் முன்பு மின்னொளியில் அலங்கரிக்கப்பட்ட 5 சப்பரத்தில் மூவரசர்களின் பவனி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக நேற்று காலையில் புனித மூவரசர்கள் திருவிழா திருப்பலியை செங்கோல் அடிகளார் தலைமை தாங்கி நிறைவேற்றினார். திருப்பலியில் அருட்தந்தையர்கள் ஆனந்தம், மைக்கேல், செல்வா, பங்குத்தந்தை ஜார்ஜ் மற்றும் அருட் சகோதரர்கள், அருட் சகோதரிகள், கிராம பொதுமக்கள் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். பகல் 12 மணிக்கு கொடிஇறக்கத்துடன் விழா நிறைபெற்றது.

விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளித்தம்மம் கிராம பங்கு இறை மக்கள் மற்றும் பங்குத்தந்தையர்கள், அருட்சகோதரிகள் செய்திருந்தனர்.


Next Story