அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் உற்சவ விழா
அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடிமாத உற்சவ விழா நடைபெறுகிறது.
சாணார்பட்டி ஒன்றியம் ராஜக்காபட்டியை அடுத்த தீத்தாம்பட்டியில் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன், பெருமாள், பேச்சியம்மாள், ஆஞ்சநேயர், பட்டவர் ஆகிய தெய்வங்களுக்கு கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடிமாத உற்சவ விழா, கடந்த 8-ந்தேதி சாமி சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. விழாவையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 11.30 மணி அளவில் தீத்தாம்பட்டியில் இருந்து அடித்தளம் பித்தளைப்பட்டி கோவிலுக்கு சென்று சாமியின் திருப்பெட்டியை எடுத்து குடகனாற்றில் நீராட்டும் நிகழ்ச்சியும், அதன் பிறகு மதியம் 2.30 மணி அளவில் சாமியின் திருப்பெட்டியை பாதயாத்திரையாக கல்லுப்பட்டி பஜனைமடத்துக்கு கொண்டுவரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
பின்னர் இரவு 9 மணி அளவில் மேளதாளம் முழங்க வாணவேடிக்கையுடன் சாமியின் திருப்பெட்டி, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலுக்கு எடுத்து வரப்படுகிறது. நாளை (புதன்கிழமை) அதிகாலை 5 மணிக்கு மாவிளக்கு, முளைப்பாரி, அக்னிசட்டி எடுத்தல், காலை 6.30 மணிக்கு அம்மனுக்கு சீர், கிடா கொடுத்தல் நிகழ்ச்சிகள் நடக்கிறது. இரவு 9 மணிக்கு அக்னிசட்டி ஆட்டம், நள்ளிரவு 12 மணிக்கு சிறுகுளக்கரையில் பாதாள பூஜை, ஆகாய பூஜை ஆகியவை நடைபெறுகிறது.
நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு சாமியின் திருக்கரகத்தை கங்கையில் விடுதல், காலை 11.30 மணிக்கு ஊர்மண்டுக்கல் தெய்வ வழிபாடு, 11.45 மணிக்கு சாமியின் திருப்பெட்டி பித்தளைப்பட்டிக்கு புறப்படுதல், இரவு 10 மணிக்கு வள்ளி திருமணம் என்ற புராண நாடகம் ஆகியவை நடக்கிறது. 18-ந்தேதி காலை 10 மணிக்கு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதல், 22-ந்தேதி மாலை 6 மணிக்கு மறுபூஜை ஆகியவை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.