ஈரோடு ராஜாஜிபுரம் மாகாளியம்மன் கோவிலில் திருவிழா:பறவை காவடி, அக்னி சட்டி ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன்
மாகாளியம்மன் கோவிலில் திருவிழாவில்: பறவை காவடி, அக்னி சட்டி ஏந்தி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினாா்கள்.
ஈரோடு ராஜாஜிபுரம் மாகாளியம்மன் கோவிலில் திருவிழாவையொட்டி பக்தர்கள் பறவை காவடி எடுத்தும் அக்னி சட்டி ஏந்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
மாகாளியம்மன் கோவில்
ஈரோடு ராஜாஜிபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற மாகாளியம்மன், மதுரை வீரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 2-ந்தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று காலை அம்மனை காவிரி ஆற்றங்கரையில் இருந்து புஷ்பரதத்தில் அலங்கரித்து கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பக்தர்கள் பறவை காவடி எடுத்தும், அக்னிச்சட்டி ஏந்தியும், இளநீர் காவடி மற்றும் அலகு குத்தியும், காட்டு வாசி வேடம் அணிந்தும் கோவிலுக்கு ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
அதைத்தொடர்ந்து பக்தர்கள் கோவில் முன்பு பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்தனர். இதையொட்டி மாகாளியம்மன் சிம்ம வாகன அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
மறுபூஜை
இன்று (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு கருப்பராயன் கோவிலில் இருந்து மதுரை வீரன் சிலையை புஷ்பரதத்தில் அலங்கரித்து ஊர்வலமாக கொண்டு வந்து சிறப்பு பூஜை நடக்கிறது. நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 8 மணிக்கு அம்மனை புஷ்பஅலங்காரத்தில் அலங்கரித்து வாணவேடிக்கையுடன் ஊர்வலமாக அழைத்து வந்து சாமிக்கு பொதுமக்கள் பூஜைகள் செய்கின்றனர்.
நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பக்தர்கள் மஞ்சள் நீராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. மாலை 4 மணிக்கு சக்தி கரகத்தை கோவிலில் இருந்து எடுத்துச்சென்று காவிரி ஆற்றில் விடப்படுகிறது. வருகிற 14-ந்தேதி காலை 7 மணிக்கு மறுபூஜையுடன் திருவிழா நிறைவடைகிறது.