சேலம் குகை மாரியம்மன், காளியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா: பக்தர்களை பரவசப்படுத்திய வண்டி வேடிக்கை
சேலம் குகை மாரியம்மன், காளியம்மன் கோவிலில் ஆடித்திருவிழாவையொட்டி நேற்று நடந்த வண்டி வேடிக்கை பக்தர்களை பரவசப்படுத்தியது.
வண்டி வேடிக்கை
சேலம் குகை மாரியம்மன், காளியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த மாதம் 26-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் கோவிலில் தீமிதி விழா நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நேற்று இரவு வெகு விமரிசையாக நடந்தது. அப்போது, குகை சுற்றுவட்டார பல்வேறு பகுதிகளில் இருந்து கண்ணை கவரும் வகையில் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வண்டிகளில் கடவுள் வேடமணிந்தவர்கள் ஊர்வலமாக வலம் வந்தனர்.
மீனாட்சி திருக்கல்யாணம்
அதாவது, குகை ஆண்டிசெட்டி தெரு வண்டி வேடிக்கை குழு சார்பில் 117-வது ஆண்டாக வண்டி அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. அதில், பக்தர்கள் லட்சுமி, நரசிம்மர் சுவாமிகள் பிரகல்நாதனுக்கு காட்சி அளிக்கும் வகையில் வண்டியில் அமர்ந்து வலம் வந்தனர். இதேபோல், புலிகுத்தி தெரு குகை இளைஞர் குழுவின் 52-வது ஆண்டு வண்டி வேடிக்கை குழு சார்பில் மதுரை மீனாட்சி திருக்கல்யாண காட்சி மிகவும் தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்தது.
வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வண்டியில் சுந்தரேஸ்வரர், மீனாட்சி திருக்கல்யாணத்தில் மகா விஷ்ணு, லட்சுமி தாரை கொடுக்க பிரம்மன் உடன் இருக்கும் காட்சியானது வண்டி வேடிக்கையை காண வந்த பக்தர்களை பரவசப்படுத்தியது.
முப்பெரும் தேவி அலங்காரம்
அதேபோல், பாண்டுரங்கநாதர் ஆட்டோ ஸ்டேண்டு அம்மன் நண்பர்கள் குழு சார்பில் சிவன், விஷ்ணு, பிரம்மா, மாரியம்மன் போன்ற கடவுள் வேடத்தை பக்தர்கள் அணிந்து வண்டியில் வலம் வந்தனர். மேலும், ஜிக்கா பக்கா நண்பர்கள் குழு சார்பில் வராக மூர்த்தி ஹிரண்யாக்சனை சூரசம்ஹாரம் செய்து பூமியை மீட்டு, லட்சுமி வராஹராக சிவனை வணங்கும் காட்சி, பராசக்தி வண்டி வேடிக்கை நண்பர்கள் சார்பில் வீரபாகு, அசுரனுடன் முருகன் இருக்கும் காட்சி, அம்பலவாணர் சுவாமி கோவில் தெரு வண்டி வேடிக்கை விழா கமிட்டி சார்பில் சரஸ்வதி, லட்சுமி, சக்தி என முப்பெரும் தேவி அங்காரம் உள்பட புராண கதைகளில் வரும் நிகழ்வை பக்தர்கள் கடவுள் வேடம் அணிந்து நாடகமாக நடித்தபடி பல்வேறு வண்டிகளில் ஊர்வலமாக வலம் வந்ததை காணமுடிந்தது.
பக்தர்கள் கூட்டம்
பல்வேறு திசைகளில் இருந்து வந்த வண்டிகள் குகை மாரியம்மன் கோவில் முன்பாக வந்தது. இந்த வண்டி வேடிக்கை நிகழ்ச்சியை பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு ரசித்தனர். இதனால் அந்த பகுதியில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. ஏதும் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
ஊது குழல்கள் பறிமுதல்
2 ஆண்டுகளுக்கு பின்பு நேற்று வண்டி வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது. இதனால் பக்தர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. இதனால் குகை ரோட்டில் ேநற்று கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அப்போது, இளைஞர்கள் ஊது குழல்களை வைத்து ஊதியவாறு சென்றனர். எங்கு பார்த்தாலும் ஊது குழல்கள் சத்தம் கேட்டதால் வண்டி வேடிக்கை பார்க்க வந்த பெண்கள், வயதான முதியவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். அப்போது, ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் இளைஞர்களின் கையில் வைத்திருந்த ஊது குழல்களை பறிமுதல் செய்து எச்சரிக்கை செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.