பூஜை பொருட்கள் வாங்க திரண்ட மக்கள்
விநாயகர் சதுர்த்தி விழா இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுவதையொட்டி பூஜை பொருட்கள் வாங்க மக்கள் திரண்டனர்.
விநாயகர் சதுர்த்தி விழா இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுவதையொட்டி பூஜை பொருட்கள் வாங்க மக்கள் திரண்டனர்.
விநாயகர் சதுர்த்தி விழா
இந்துக்களின் முக்கிய பண்டிகையான விநாயகர் சதுர்த்தி விழா இன்று (புதன்கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது.கொரோனா தொற்று ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கடந்த 2 ஆண்டுகளால் ஆட்டம், பாட்டம், ஊர்வலத்துடன் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால் வழக்கமான கொண்டாட்டம் இல்லாமல் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து எளிமையாக மக்கள் கொண்டாடினர்.
ஆயத்தம்
தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாததால் பொதுமக்கள் வழக்கமான ஆரவாரத்துடன் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியை கொண்டாட ஆயத்தமாகி உள்ளனர். விநாயகர் சதுர்த்தி அன்று பொதுமக்கள் தங்கள் வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்தும், இந்து அமைப்பினர் சாலை மற்றும் தெரு சந்திப்பு பகுதிகளில் பல அடி உயரம் கொண்ட சிலைகளை வைத்தும் வழிபட்டு, பின்னர் கடல், ஆறு, ஏரி, குளம், குட்டை ஆகியவற்றில் சிலைகளை கரைப்பது வழக்கம்.அதன்படி தஞ்சை மாவட்டத்தில் சிவன் மற்றும் விஷ்ணு வடிவில் விநாயகர், சக்தியுடன் விநாயகர், சித்தி மற்றும் புத்தியுடன் விநாயகர், யானை, புலிகள், கருடன், மயில், மூச்சூறு மீது விநாயகர் என பல்வேறு வடிவிலான விநாயகர் சிலைகள் 3 அடி முதல் 10 அடி உயரம் வரையில் உருவாக்கப்பட்டு பிரதிஷ்டை செய்து வழிபட தயார் நிலையில் உள்ளன.
பொரி, கடலை விற்பனை
தஞ்சை கீழவாசல் மார்க்கெட், திலகர் திடல் மாலைநேர மார்க்கெட்டில் களிமண்ணால் செய்யப்பட்ட 1 அடி முதல் 1½ அடி உயர விநாயகர் சிலைகளை தள்ளுவண்டிகளில் வைத்து வியாபாரிகள் விற்பனை செய்தனர். இந்த சிலைகளை வீடுகளில் வைத்து வழிபடுவதற்காக பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். மேலும் விநாயகர் சிலையின் மேல் பகுதியில் வைக்கும் வகையில் குடைகளும் விற்பனை செய்யப்பட்டன. மேலும் பூஜையில் வைப்பதற்காக அவல், பொரி, கடலையையும் மக்கள் அதிகஅளவில் வாங்கி சென்றனர்.விநாயகர் சிலைக்கு அணிவிப்பதற்காக எருக்கம்பூ மாலையையும் வாங்கி சென்றனர். வாழைக்கன்றுகள், தென்னஓலையால் ஆன தோரணங்கள், அருகம்புற்கள் மற்றும் வெற்றிலை, பாக்குகள் ஆகியவைகளையும் மக்கள் வாங்கி சென்றனர். நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள உழவர் சந்தையில் வாழைக்கன்றுகள், வாழைத்தார்கள் அதிகஅளவில் குவித்து வைக்கப்பட்டுள்ளது.