அடிக்கல் நாட்டிய பதினைந்தே மாதங்களில் இன்று திறப்பு விழா - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
அடிக்கல் நாட்டிய பதினைந்தே மாதங்களில் இன்று திறப்பு விழா காண்கிறது கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
சென்னை கிண்டியில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (வியாழக்கிழமை) திறந்து வைக்கிறார். திறப்பு விழாவையொட்டி மருத்துவமனை முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர். இந்த பன்னோக்கு மருத்துவமனையில் இதயம், நெஞ்சகம், சிறுநீரகம், மூளை நரம்பியல், ரத்த நாளங்கள், குடல் - இரைப்பை, புற்றுநோய் ஆகிய பிரிவுகளுக்கான சிறப்பு அறுவை சிகிச்சை துறைகளும் அமைக்கப்பட்டு இருக்கின்றன.
இந்தநிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில், அடிக்கல் நாட்டிய பதினைந்தே மாதங்களில் இன்று திறப்பு விழா காண்கிறது 'கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை' என பதிவிட்டுள்ளார்.