கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் தலைவர் வார்டு உறுப்பினர்கள் இடையே மோதல்


கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் தலைவர் வார்டு உறுப்பினர்கள் இடையே மோதல்
x

தாராபுரம் அருகே கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் இடையே ஏற்பட்ட மோதலால் தலைவர் தர்ணா போராட்டத்திலும், வார்டு உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்

தாராபுரம் அருகே கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் இடையே ஏற்பட்ட மோதலால் தலைவர் தர்ணா போராட்டத்திலும், வார்டு உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்திலும் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மாதாந்திர கூட்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கவுண்டச்சி புதூர் ஊராட்சியில் தலைவராக செல்வி ரமேஷ், துணைத்தலைவராக நாச்சிமுத்து உள்ளனர். வார்டு உறுப்பினர்களாக தனலட்சுமி நாகராஜ், நர்மதா ஈஸ்வரன், தமிழ்செல்வி செல்வராஜ், சரஸ்வதி தங்கராசு, குப்புசாமி, பாலசுப்பிரமணி, புனிதா, கார்த்திக், செல்வன், அபிநயா, இளங்கோவன் ஆகியோர் உள்ளனர். இந்த ஊராட்சியில் நேற்று மாதாந்திர கூட்டம் நடைபெறுவதாக அனைத்து வார்டு உறுப்பினர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டது.

அதன்படி நேற்று காலை 10 மணிக்கு ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் வந்தனர். காலை 11 மணிக்கு ஊராட்சி தலைவர் செல்விரமேஷ் தலைமையில் கூட்டம் தொடங்கியது. அப்போது வார்டு உறுப்பினர்கள் அனைவரும் கடந்த மாதம் நடந்த கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானங்களின் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என தலைவரிடம் கேள்வி எழுப்பினர்.

மேலும் ஊராட்சி பகுதியில் நரிக்குறவர் காலனி, பெஸ்ட் நகர், ராம்நகர், பாலசுப்ரமணியம் நகர், மாருதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 3 ஆண்டு காலமாக எந்தவித பணிகளும் நடைபெறவில்லை என குற்றஞ்சாட்டினர்.

வாக்குவாதம்

அதற்கு தலைவர் செல்வி ரமேஷ் பதிலளிக்கையில், "வார்டு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர். ஆனால் தீர்மானத்தில் கையெழுத்திடுவதில்லை. அதனால் தான் வளர்ச்சி பணிகளை முழுமையாக செயல்படுத்த முடியவில்லை" என்றார்.

ஆனால் வார்டு உறுப்பினர்கள், நாங்களும் ஒவ்வொரு முறையும் தீர்மானத்தில் கையெழுத்திட்டு சென்றாலும் பணிகள் நடைபெறுவதில்லை. கையெழுத்திட்ட பணிகள் மேற்கொள்ளப்படாததால் பொதுமக்களிடையே கெட்ட பெயர் ஏற்படுகிறது" என்றனர்.

தர்ணா-உள்ளிருப்பு

இதனால் ஊராட்சி தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது தலைவர் செல்வி ரமேஷ் தனது இருக்கையை விட்டு எழுந்து அலுவலகத்திற்கு வெளியே வந்து வாசல் முன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அதற்கு வார்டு உறுப்பினர்களும் தங்கள் வார்டில் பணி நடைபெறவில்லை எனக்கூறி அலுவலகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ஜீவானந்தம், இருதரப்பு வாதங்களை கேட்ட பின்பு கூடிய விரைவில் நல்ல முடிவு எடுப்பதாக கூறினார். தற்போது போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டார். ஆனால் தலைவர் செல்விரமேஷ் மாவட்ட கலெக்டர் வந்தால்தான் பிரச்சினை தீரும் என கூறி இரவு 8 மணி வரை போராட்டத்தை கைவிடவில்லை.

இரவு 8 மணிவரை

அதேபோல வார்டு உறுப்பினர்களும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வரும் வரை போராட்டத்தை கைவிடப்போவதாக இல்லை என கூறினார்கள். இந்த போராட்டம் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை நீடித்தும் உள்ளாட்சித்துறையில் இருந்து மேல் அதிகாரிகள் யாரும் சம்பவ இடத்துக்கு வரவில்லை.

மாவட்ட கலெக்டர் வினீத் கவுண்டச்சிபுதூர் ஊராட்சியில் தனிக்கவனம் செலுத்தி வார்டு உறுப்பினர்கள் மற்றும் தலைவர் இடையேயான மோதல் போக்கை முடிவுக்கு கொண்டுவந்து திட்டப்பணிகள் நிறைவேற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


Related Tags :
Next Story