பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் கைது
பெரியார் சிலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சினிமா சண்டை பயிற்சியாளர் கனல் கண்ணன் புதுச்சேரியில் நேற்று கைது செய்யப்பட்டார்.
சென்னை,
சென்னையை அடுத்த மதுரவாயலில் கடந்த மாதம் 31-ந்தேதி இந்து முன்னணி சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில், இந்து முன்னணியின் மாநில கலை பண்பாட்டு பிரிவின் தலைவரும், சினிமா சண்டை பயிற்சியாளருமான கனல் கண்ணன் கலந்துகொண்டு பேசினார்.
அப்போது அவர், ''ஸ்ரீரங்கம் கோவில் எதிரே, கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை என்று உடைக்கப்படுகிறதோ, அன்றுதான் இந்துக்களின் எழுச்சி நாள்'' என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.
போலீசார் வழக்குப்பதிவு
இந்த நிலையில், கனல் கண்ணனின் இந்த சர்சைக்குரிய கருத்தை அடிப்படையாக வைத்து, அவர் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் குமரன் கடந்த 4-ந்தேதி புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதன் அடிப்படையில் கனல் கண்ணன் மீது மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் கிரைம் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
புதுச்சேரியில் கைது
இதையறித்து, கனல் கண்ணன் தலைமறைவானார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், புதுச்சேரியில் உள்ள தனியார் தங்கும் விடுதி ஒன்றில் தலைமறைவாக இருந்த கனல் கண்ணனை நேற்று சென்னை போலீசார் கைது செய்தனர். பின்னர், அவரை சென்னை அழைத்து வந்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் கோர்ட்டு உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.