பொதுப்பணித்துறைக்கு சொந்தமான மரங்களை வெட்டியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யுங்கள்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


பொதுப்பணித்துறைக்கு சொந்தமான மரங்களை வெட்டியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யுங்கள்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

பொதுப்பணித்துறைக்கு சொந்தமான மரங்களை வெட்டியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யுங்கள் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

மதுரை

பொதுப்பணித்துறைக்கு சொந்தமான மரங்களை வெட்டியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யுங்கள் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

வேறோரு மரங்களை வெட்டினர்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே மணமேட்டுப்பட்டியைச் சேர்ந்த ரேணுகோபால், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

எங்கள் பகுதியில் உள்ள குடகனாறு அணையின் துணை கால்வாய் அமைந்துள்ளது. இந்த கால்வாயின் கரைகளில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நிலங்களில் வேம்பு, ஊஞ்சை, வேளான், வெப்பாளை வகையை சேர்ந்த ஏராளமான மரங்கள் இருந்தன.

இந்த மரங்களை எந்த அனுமதியும் இன்றி மணமேட்டுப்பட்டியைச் சேர்ந்த தனிநபர்கள் ஜே.சி.பி. எந்திர உதவியுடன் வெட்டி எடுத்து திருடிச்சென்றனர். அதுமட்டுமல்லாமல் கால்வாய் கரையையும், தண்ணீர் செல்ல பயன்படும் தொட்டியையும் உடைத்துவிட்டனர். இதனால் இந்த பகுதியில் பாசனம் பாதிக்கப்பட்டது.

பராமரிக்க உத்தரவிடுங்கள்

இதுகுறித்து குடகனாறு அணை உதவி பொறியாளரிடம் புகார் செய்தோம். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.

எனவே எங்கள் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான மரங்களை வெட்டி, கால்வாய் கரைகளை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். அதுமட்டுமல்லாமல் இயற்கையை பாதுகாக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள், கால்வாய் பகுதிகளில் உள்ள மரங்களை பராமரிக்கவும் தமிழக அரசு அதிகாரிகளுக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

வழக்குபதிவு செய்யுங்கள்

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், அரசுக்கு சொந்தமான இடங்களில் உள்ள மரங்களை அனுமதியின்றி வெட்டக்கூடாது. முறையான அனுமதியைப் பெற்றுத்தான் வெட்ட வேண்டும். இந்த வழக்கை பொறுத்த வரை, அனுமதியின்றி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்த மரங்களை வெட்டியவர்கள் மீது வழக்குபதிவு செய்ய வேண்டும்.

அவர்கள் மீது எடுத்த நடவடிக்கையை குடகனாறு செயற்பொறியாளர் இந்த கோர்ட்டில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். விசாரணையை 2 வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.


Next Story