4 மருத்துவக்கல்லூரிகளின் பிரேத பரிசோதனை அறை கேமரா பதிவுகளை தாக்கல் செய்யுங்கள்


4 மருத்துவக்கல்லூரிகளின் பிரேத பரிசோதனை அறை கேமரா பதிவுகளை தாக்கல் செய்யுங்கள்
x

4 மருத்துவக்கல்லூரிகளின் பிரேத பரிசோதனை அறை கேமரா பதிவுகளை தாக்கல் செய்யுங்கள் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

மதுரை

மதுரையைச் சேர்ந்த வக்கீல் அருண்சுவாமிநாதன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அவமதிப்பு மனுவில் கூறியிருந்ததாவது:-

தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில். பிரேத பரிசோதனை அறைகளில் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த 2008-ம் ஆண்டு கோர்ட்டு பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தும்படி உத்தரவிட வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தேன்.

அதை விசாரித்த ஐகோர்ட்டு, மருத்துவ விதிகளின்படி, பிரேத பரிசோதனை முடித்தபின், அது தொடர்பான அறிக்கையை சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டு மற்றும் துறைத் தலைவருக்கு 24 மணி நேரத்திற்குள் அளிக்க வேண்டும். பிரேத பரிசோதனை கூடம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் உள்பட பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தது. இந்த உத்தரவுகள் இதுவரை நடைமுறைப்படுத்தவில்லை. எனவே உரிய அதிகாரிகள் மீது அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தார்.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், ஸ்ரீமதி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மதுரை, நெல்லை, சிவகங்கை மாவட்ட மருத்துவக்கல்லூரி பிரேத பரிசோதனை அறைகளின் கேமரா பதிவுகளை அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மருத்துவக்கல்லூரிகளில் சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டுகளின் உத்தரவுகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை அறிய, திருச்சி, தஞ்சை, கன்னியாகுமரி, கரூர் உள்ளிட்ட மதுரை ஐகோர்ட்டு எல்லைக்கு உட்பட்ட மருத்துவக்கல்லூரிகளின் பிரேத பரிசோதனை அறைகளின் கண்காணிப்பு கேமரா பதிவான கடைசி 3 நாட்களின் பதிவுகளை தாக்கல் செய்யுங்கள் என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

=======


Related Tags :
Next Story