தண்டனையை எதிர்த்து தாக்கல்: சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரகபூர் உள்ளிட்டோரின் அப்பீல் மனு தஞ்சை கோர்ட்டுக்கு மாற்றம் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

தண்டனையை எதிர்த்து தாக்கல்: சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரகபூர் உள்ளிட்டோரின்  அப்பீல் மனு தஞ்சை கோர்ட்டுக்கு மாற்றம் - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

சிலை கடத்தல் வழக்கில் விதித்த தண்டனையை எதிர்த்து சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரகபூர் உள்ளிட்டோரின் மேல் முறையீட்டு மனுக்களை தஞ்சாவூர் கோர்ட்டுக்கு மாற்றி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

மதுரை

சிலை கடத்தல் வழக்கில் விதித்த தண்டனையை எதிர்த்து சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திரகபூர் உள்ளிட்டோரின் மேல் முறையீட்டு மனுக்களை தஞ்சாவூர் கோர்ட்டுக்கு மாற்றி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

சிலை கடத்தல் வழக்கு

அரியலூர் மாவட்டம் சித்தமல்லி வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்த 20 சிலைகள் கடந்த 2000-ம் ஆண்டு கொள்ளை போனது. இந்த சம்பவம் குறித்து 2008-ம் ஆண்டில் சிலை திருட்டு தடுப்பு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது சம்பந்தமாக அமெரிக்காவில் கலைக்கூடம் நடத்தி வந்த சிலை கடத்தல் மன்னன் சுபாஷ் சந்திர கபூரை 2011-ம் ஆண்டில் கைது செய்தனர். இதே வழக்கில் மேலும் சிலரையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த கும்பகோணம் கோர்ட்டு, சுபாஷ்சந்திரகபூர், சஞ்சீவி அசோகன், பாக்கியகுமார் ஆகியோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.

இதே வழக்கில் மாரிச்சாமி, ஸ்ரீராம், பார்த்திபன் ஆகியோருக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மேல்முறையீடு

கும்பகோணம் கோர்ட்டு விதித்த தண்டனையை எதிர்த்து, பாக்கியகுமார் தஞ்சை மாவட்ட கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். ஆனால் தண்டனையை எதிர்த்து ஐகோர்ட்டில்தான் மேல் முறையீடு செய்ய முடியும் எனக்கூறி அந்த மனுவை விசாரிக்க கீழ்கோர்ட்டு மறுத்தது.

இதை எதிர்த்து சுபாஷ்சந்திரகபூர் உள்ளிட்ட சிலர், மதுரை ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

தஞ்சை கோட்டுக்கு மாற்றம்

இந்த மனுக்களை நீதிபதி இளங்கோவன் விசாரித்தார். அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாகதான் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. இதை ஒட்டுமொத்தமாக கணக்கிட முடியாது. எனவே மாவட்ட கோர்ட்டில்தான் மனு தாக்கல் செய்ய முடியும் என வாதிட்டார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, இந்த மனுக்கள் அனைத்தையும் தஞ்சை மாவட்ட கோர்ட்டு விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார்.

Next Story