முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல்
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது குற்றப்பத்திரிகையை லஞ்ச ஒழிப்பு போலீசார் கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்தனர்.
வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது குற்றப்பத்திரிகையை லஞ்ச ஒழிப்பு போலீசார் கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்தனர்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
அ.தி.மு.க. ஆட்சியில் உயர்க்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் கே.பி.அன்பழகன். இவா தனது பெயரிலும், குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நெருக்கமானவர்கள் பெயர்களிலும் அதிக சொத்துகள் சேர்த்ததாக புகார்கள் வந்தன. இது தொடர்பாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 19-ந் தேதி கே.பி.அன்பழகன், அவருடைய மனைவி, மகன்கள் உள்ளிட்ட 5 பேர் மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் வாங்கி குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 58 இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனையும் நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது ரூ.2 கோடியே 87 லட்சத்து 98 ஆயிரம் ரொக்கம், 6.63 கிலோ தங்க நகைகள், 13.85 கிலோ வெள்ளி மற்றும் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இந்த காலக்கட்டத்தில் கே.பி.அன்பழகனின் சொத்து வருமானத்தின் அடிப்படையில் ரூ.10 கோடியே 10 லட்சத்து 39 ஆயிரத்து 663-க்கு மிகாமல் இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்போது ரூ.11 கோடியே 32 லட்சத்து 95 ஆயிரம் அளவிற்கு சொத்துகள் இருப்பது தெரியவந்தது.இதைத்தொடர்ந்து கே.பி.அன்பழகன் உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழ் தர்மபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
10 ஆயிரம் பக்கங்கள்
இதற்கிடையே தர்மபுரி தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் கே.பி.அன்பழகன் உள்ளிட்ட 11 பேர் மீது நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த குற்றப்பத்திரிகை 10 ஆயிரம் பக்கங்கள் கொண்டது. இதனை ஒரு பெரிய பெட்டியில் வைத்து ஜீப் மூலமாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் அலுவலகத்தில் இருந்து கோர்ட்டுக்கு போலீசார் கொண்டு வந்தனர்.