இறுதி பட்டியல் வெளியீடு:தேனி மாவட்டத்தில் 11 லட்சம் வாக்காளர்கள்


இறுதி பட்டியல் வெளியீடு:தேனி மாவட்டத்தில் 11 லட்சம் வாக்காளர்கள்
x
தினத்தந்தி 5 Jan 2023 6:45 PM GMT (Updated: 5 Jan 2023 6:45 PM GMT)

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதில் தேனி மாவட்டத்தில் 11 லட்சத்து 15 ஆயிரம் வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.

தேனி

இறுதி வாக்காளர் பட்டியல்

இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. அதன்படி, தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளரான அயல்நாடு வாழ் மனிதவள நிறுவன மேலாண்மை இயக்குனர் மகேஸ்வரன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் முரளிதரன் வெளியிட்டார்.

அப்போது உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. பால்பாண்டி, பெரியகுளம் ஆர்.டி.ஓ. சிந்து, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அன்பழகன், தேர்தல் பிரிவு தாசில்தார் செந்தில்முருகன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

11.15 லட்சம் வாக்காளர்கள்

இறுதி வாக்காளர் பட்டியலின்படி, தேனி மாவட்டத்தில் மொத்தம் 11 லட்சத்து 15 ஆயிரத்து 556 வாக்காளர்கள் உள்ளனர். அதில் ஆண்கள் 5 லட்சத்து 46 ஆயிரத்து 686 பேர், பெண்கள் 5 லட்சத்து 68 ஆயிரத்து 675 பேர், மூன்றாம் பாலினத்தவர்கள் 195 பேர் இடம்பெற்றுள்ளனர்.

சட்டமன்ற தொகுதி வாரியாக ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் 1,34,925 ஆண் வாக்காளர்கள், 1,38,430 பெண் வாக்காளர்கள், 30 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,73,385 வாக்காளர்கள் உள்ளனர். பெரியகுளம் (தனி) சட்டமன்ற தொகுதியில் 1,39,439 ஆண் வாக்காளர்கள், 1,44,958 பெண் வாக்காளர்கள், 112 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,84,509 வாக்காளர்கள் உள்ளனர்.

போடி சட்டமன்ற தொகுதியில் 1,34,151 ஆண் வாக்காளர்கள், 1,40,552 பெண் வாக்காளர்கள், 20 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,74,723 வாக்காளர்கள் உள்ளனர். கம்பம் சட்டமன்ற தொகுதியில் 1,38,171 ஆண் வாக்காளர்கள், 1,44,735 பெண் வாக்காளர்கள், 33 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 2,82,939 வாக்காளர்கள் உள்ளனர்.

பெயர் சேர்க்கை

இந்த இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களிலும் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதனை பார்வையிட்டு தங்களின் பெயர், விவரங்கள் சரியாக உள்ளதா? என உறுதி செய்து கொள்ளலாம்.

மேலும், 1.1.2023-ம் தேதியை தகுதிநாளாக கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் புதிய வாக்காளர்களாக தங்களின் பெயரை சேர்த்துக் கொள்ளவும், விடுபட்டவர்களும் பெயர் சேர்க்கை தொடர்பாக விண்ணப்பிக்கலாம். அத்துடன் திருத்தம், முகவரி மாற்றம், பெயர் நீக்கம் தொடர்பாகவும் உரிய படிவங்களை பூர்த்தி செய்து கொடுக்கலாம் என்று கலெக்டர் முரளிதரன் தெரிவித்தார்.


Related Tags :
Next Story