110 கிலோமீட்டர் வேகத்தில் இறுதி கட்ட சோதனை ஓட்டம்


110 கிலோமீட்டர் வேகத்தில் இறுதி கட்ட சோதனை ஓட்டம்
x

110 கிலோமீட்டர் வேகத்தில் இறுதி கட்ட சோதனை ஓட்டம்

நாகப்பட்டினம்

நாகை-வேளாங்கண்ணி இடையேயான ரெயில் பாதையில் 110 கிலோமீட்டர் வேகத்தில் ரெயில் இயக்கும் இறுதி கட்ட சோதனை ஓட்டத்தை ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அபே குமார் ராய் வருகிற 20-ந்தேதி(புதன்கிழமை) நேரில் ஆய்வு செய்ய உள்ளார்.

வேளாங்கண்ணி பேராலயம்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக பிரசித்தி பெற்ற ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்துக்கு வெளியூர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ரெயில் மார்க்கமாக வரும் பக்தர்கள் நாகை ரெயில் நிலையம் வந்து பின்னர் அங்கிருந்து பஸ், கார், ஆட்டோக்களில் செல்ல வேண்டிய நிலை இருந்து வந்தது.

இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் மற்றும் பேராலய நிர்வாகம் சார்பில் நாகையில் இருந்து வேளாங்கண்ணிக்கு ரெயில் போக்குவரத்து வசதி ஏற்படுத்தித்தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

புதிய ரெயில் பாதை

இந்த கோரிக்கையை ஏற்று நாகை-வேளாங்கண்ணி இடையே 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய ரெயில் பாதை அமைக்கப்பட்டது. கடந்த 2010-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி நாகை-வேளாங்கண்ணி அகல ரெயில் பாதை போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.

இந்த வழியாக தினந்தோறும் பயணிகள் ரெயில் மற்றும் கம்பன் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இது தவிர வாரந்தோறும் வேளாங்கண்ணியில் இருந்து கோவாவுக்கு வாஸ்கோடாகாமா எக்ஸ்பிரஸ் ரெயிலும் இயக்கப்பட்டு வந்தது.

மின்மயமாக்கும் பணி

கொரோனா ஊரடங்கால் வேளாங்கண்ணிக்கு ரெயில் சேவை நிறுத்தப்பட்டது. அன்று இருந்து தற்போது வரை ரெயில் இயக்கப்படவில்லை. இதனிடையே திருச்சி-காரைக்கால் வரை ரெயில் பாதைகள் மின் மயமாக்கும் பணிகள் நடந்து சோதனை ஓட்டமும் நடத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நாகை-வேளாங்கண்ணி இடையேயான ரெயில் பாதையும் மின்மயமாக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடந்து வந்தன.

இந்த அகல ரெயில் பாதை மேம்படுத்தும் பணிகள் நிறைவடைந்ததையடுத்து தெற்கு ரெயில்வேயின் கட்டுமான அமைப்பு மற்றும் திருச்சி கோட்ட அலுவலர்கள் இணைந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நாகை-வேளாங்கண்ணி இடையே சோதனை ஓட்டம் நடத்தினர். டீசல் என்ஜினை கொண்டு இயக்கப்பட்ட ரெயில் 110 கிலோ மீட்டர் வேகத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.

ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு

இந்த நிலையில் இந்த பணிகளை ஆய்வு செய்து இறுதி கட்ட சோதனை ஓட்டம் நடத்துவதற்காக தெற்கு மண்டல ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் அபே குமார் ராய் தலைமையில் அதிகாரிகள் 20-ந்தேதி(புதன்கிழமை) ஆய்வு மேற்கொள்ள உள்ளனர்.

இதில் ரெயில் பாதையின் தரம், மின்மயமாக்கப்பட்ட பணிகள், அதிவேக சோதனை மற்றும் பயணிகளின் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்ய உள்ளனர். இவை அனைத்தும் உறுதி செய்யப்பட்ட பின் நாகை-வேளாங்கண்ணி இடையே 110 கிலோமீட்டர் வேகத்தில் ரெயில் இயக்கப்படும் என்று ரெயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Next Story